பாகிஸ்தானுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 135 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 538 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான், 2-ஆவது நாளான புதன்கிழமை ஆட்டநேர முடிவில் 41 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 126 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

அஸார் அலி 58, யூனிஸ் கான் 64 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.

முன்னதாக, இந்த இரு அணிகளுக்கு இடையே சிட்னியில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, முதல்நாளில் 88 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 365 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

அபாரமாக ஆடிய டேவிட் வார்னர் 95 பந்துகளில் 113 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்ப, ஆட்டநேர முடிவில் ரென்ஷா 167, ஹேண்ட்ஸ்கோம்ப் 40 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், 2-ஆவது நாள் ஆட்டத்தில் இரட்டைச் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரென்ஷா, 293 பந்துகளில் 20 பவுண்டரிகளுடன் 184 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஹில்டன் 37 ஓட்டங்கள் எடுக்க, மறுமுனையில் சதம் கடந்து நிலைத்த ஹேண்ட்ஸ்கோம்ப் 205 பந்துகளில் 110 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த மேத்யூ வேட் 29, மிட்செல் ஸ்டார்க் 16 ஓட்டங்களில் வீழ்ந்தனர்.

இந்த நிலையில், அணியின் ஸ்கோர் 538-ஆக இருந்தபோது, டிக்ளேர் செய்வதாக அறிவித்தது ஆஸ்திரேலியா. ஸ்டீவ் கீஃப் ஓட்டங்கள் இன்றி களத்தில் இருந்தார்.

பாகிஸ்தான் தரப்பில் வஹாப் ரியாஸ் 3, இம்ரான் கான், அஸார் அலி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.