ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. 

இலங்கை அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடிவருகிறது. இதில் முதல் போட்டி பிரிஸ்பேனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியில் அந்த அணியின் விக்கெட் கீப்பரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுமான டிக்வெல்லாவை தவிர மற்ற எந்த வீரருமே சோபிக்கவில்லை. 

தொடக்கம் முதலே விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்துவந்தது இலங்கை அணி. டிக்வெல்லா மட்டுமே களத்தில் நிலைத்து நின்று அரைசதம் அடித்தார். 64 ரன்கள் அடித்து அவரும் பாட் கம்மின்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்டமான நேற்றே, வெறும் 57 ஓவர்கள் மட்டுமே ஆடி 144 ரன்களுக்கே முதல் இன்னிங்ஸை இழந்தது இலங்கை அணி. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 82 ரன்களுக்கே முதல் 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பிறகு லாபஸ்சாக்னே மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரும் நிதானமாக ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த ஜோடி விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் ஆடி ரன்களை சேர்த்தது. இருவருமே அரைசதம் கடந்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த வேளையில், அந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்தார் தனஞ்செயா டி சில்வா. லாபஸ்சாக்னேவை 81 ரன்களில் வெளியேற்றினார். 

இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 166 ரன்களை குவித்தது. அதன்பிறகு டிராவிஸ் ஹெட்டை 84 ரன்களில் வீழ்த்திய லக்மல், அதற்கு அடுத்த பந்திலேயே கேப்டன் டிம் பெய்னை கோல்டன் டக் அவுட்டாக்கி அனுப்பினார். பேட்டர்சன் மட்டும் சிறிது நேரம் நிலைத்து 30 ரன்களை அடித்தார். 9 விக்கெட்டுகள் விழுந்துவிட, கடைசி விக்கெட்டுக்கு ஸ்டார்க்குடன் ரிச்சர்ட்ஸன் ஜோடி சேர்ந்தார். ஒரே ஒரு விக்கெட் மட்டுமே கையில் இருந்த நிலையில், நடப்பது நடக்கட்டும் என்று அதிரடியாக ஆடினார் மிட்செல் ஸ்டார்க். கடைசி விக்கெட் எப்படியும் விழப்போகிறது, அதற்குள்ளாக முடிந்தவரை ரன்களை குவிக்கும் நோக்கில் அடித்து ஆடினார். 

பெரேரா ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை அடித்த ஸ்டார்க், இலங்கை அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் லக்மலின் பந்தில் சிக்ஸர் மற்றும் பவுண்டரியை அடுத்தடுத்து அடித்து மிரட்டினார். கடைசியில் ரிச்சர்ட்ஸன் அவுட்டாக, ஆஸ்திரேலிய அணி 323 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை முடித்தது. அதிரடியாக ஆடிய மிட்செல் ஸ்டார்க் 25 பந்துகளில் 26 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. 

179 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் கருணரத்னே மற்றும் திரிமன்னே ஆகிய இருவரும் நிதானமாகவே ஆடினர். எனினும் இரண்டாம் நாளான இன்றைய ஆட்டத்தின் கடைசி பந்தில் கம்மின்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார் கருணரத்னே. இன்றைய ஆட்டத்தின் கடைசி பந்தில், அதுவும் இலங்கை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனை வீழ்த்தியதை அடுத்து ஆஸ்திரேலிய வீரர்கள் அந்த விக்கெட்டை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.