ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 24 ஒட்டங்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றிப் பெற்றதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது நியூஸிலாந்து.
ஹாமில்டன் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணியில் டாம் லதாம் டக் அவுட்டாக, டீன் பிரெளன்லீயுடன் இணைந்தார் கேப்டன் கேன் வில்லியம்சன்.
இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 70 ஓட்டங்கள் சேர்த்தது. வில்லியம்சன் 42 பந்துகளில் 37 ஓட்டங்கள் சேர்த்து வெளியேற, பிரெளன்லீயுடன் ஜோடி சேர்ந்தார் ராஸ் டெய்லர். இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 100 ஓட்டங்கள் சேர்த்தது. 78 பந்துகளைச் சந்தித்த பிரெளன்லீ 7 பவுண்டரிகளுடன் 63 ஓட்டங்கள் எடுத்தார்.
பின்னர் வந்த நீல் புரூம் 8, காலின் மன்றோ 3, ஜேம்ஸ் நீஷம் 1 ஓட்டங்களில் நடையைக் கட்ட, மிட்செல் சேன்ட்னர் களம்புகுந்தார்.
இதனிடையே மறுமுனையில் சிறப்பாக ஆடிய ராஸ் டெய்லர் 96 பந்துகளில் சதமடித்தார். இது ஒரு நாள் போட்டியில் அவர் அடித்த 16-ஆவது சதமாகும். அவர் 101 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 107 ஓட்டங்கள் குவித்தார்.
இறுதியில் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 281 ஓட்டங்கள் குவித்தது நியூஸிலாந்து. அதிரடியாக ஆடி மிட்செல் சேன்ட்னர் 34 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 38 ஓட்டங்கள் சேர்த்து தெறிக விட்டார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆஸ்திரேலியத் தரப்பில் மிட்செல் ஸ்டார்க், ஜேம்ஸ் ஃபாக்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
பின்னர் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் ஷான் மார்ஷ் - கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7.2 ஓவர்களில் 44 ஓட்டங்கள் சேர்த்தது.
மார்ஷ் 22 ஓட்டங்களில் ரன் அவுட்டாக, பின்னர் வந்த ஹேண்ட்ஸ்காம்ப் ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே டிரென்ட் போல்ட் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.
இதையடுத்து ஆரோன் ஃபிஞ்சுடன் இணைந்தார் டிராவிஸ் ஹெட். இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 75 ஓட்டங்கள் சேர்த்தது. ஆரோன் ஃபிஞ்ச் 56 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த மேக்ஸ்வெல் டக் அவுட்டானார்.
இதன்பிறகு டிராவிஸ் ஹெட் 53 ஓட்டங்களில் வெளியேற, ஜேம்ஸ் ஃபாக்னர் ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே வீழ்ந்தார்.
இதன்பிறகு மார்கஸ் ஸ்டானிஸ் 42 ஓட்டங்களிலும், பட் கம்மின்ஸ் 27 ஓட்டங்களிலும், ஆடம் ஸம்பா 1 ரன்னிலும் வெளியேற, ஆஸ்திரேலியா 47 ஓவர்களில் 257 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. மிட்செல் ஸ்டார்க் 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட் 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதன்மூலம் ஆட்டநாயகன் விருதையும் போல்ட் தட்டிச் சென்றார்.
