வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன்மூல்ம் இரண்டு ஆட்டங்களைக் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்தது. அந்த அணி தனது முதல் இன்னிங்ஸில் 113.2 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 305 ஓட்டங்கள் எடுத்தது.

அணியின் முஷ்ஃபிகர் ரஹிம் அதிகபட்சமாக 68 ஓட்டங்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன் அதிகபட்சமாக 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா 119.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 377 ஓட்டங்கள் எடுத்தது.

டேவிட் வார்னர் அதிகபட்சமாக சதம் கடந்து 123 ஓட்டங்கள் விளாசினார். வங்கதேச

தரப்பில், முஷ்டாஃபிஸுர் ரஹ்மான் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

முதல் இன்னிங்ஸில் 72 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது வங்கதேசம். இதில் 71.2 ஓவர்களில் 157 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

முஷ்ஃபிகர் ரஹிம் அதிகபட்சமாக கேப்டன் 31 ஓட்டங்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் 86 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேற்று தனது 2-வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 15.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 87 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஹேண்ட்ஸ்காம்ப் 16 ஓட்டங்கள், கிளென் மேக்ஸ்வெல் 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

வங்கதேசத்தின் முஷ்டாஃபிஸுர் ரஹ்மான், ஷகிப் அல் ஹசன், தைஜுல் இஸ்லாம் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். தொடர் நாயகன் விருதை அவரும், டேவிட் வார்னரும் பகிர்ந்து கொண்டனர்.