விராட் கோலியை டெல்லி கிரிக்கெட் வாரியம் கண்டுகொள்ளாத சமயத்தில், அவரை ஆட வைத்தே ஆக வேண்டும் என்று அடம்பிடித்து கோலிக்கு வாய்ப்பு பெற்று கொடுத்தது நான் தான் என்று முன்னாள் வீரர் அடுல் வாசன் தெரிவித்துள்ளார். 

கிரிக்கெட்டில் இன்று சிறந்து விளங்கும் ஒவ்வொரு வீரரும் ஆரம்ப காலத்தில் வாய்ப்பிற்காக கஷ்டப்பட்டிருப்பார்கள். தோனி, கோலி, ரோஹித் என்று யாருமே இதற்கு விதிவிலக்கல்ல. வாய்ப்பிற்காக கஷ்டப்பட்டு, பல கடினமான பாதைகளை கடந்துதான் இன்று வெற்றி வீரர்களாக தங்களை நிலைநிறுத்தியுள்ளனர். 

அந்த வகையில், இன்று உலகின் தலைசிறந்த வீரராக வலம்வரும் இந்திய அணியின் கேப்டன் கோலி, பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். தொடர்ந்து சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார்.

இன்று தலைசிறந்து விளங்கும் கோலிக்கு ஆரம்பத்தில் வாய்ப்பு கொடுத்தது நான் தான் என முன்னாள் வீரர் அடுல் வாசன் தெரிவித்துள்ளார். கலீஜ் டைம்ஸ் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், விராட் கோலி என்னுடைய அகாடமியிலிருந்து வந்தவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? விராட் கோலியின் பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா என்னுடைய சிறந்த நண்பர். நாங்கள் இருவரும் சேர்ந்துதான் அகாடமி தொடங்கினோம். 11 வயதாக இருக்கும்போது கோலி எங்களிடம் வந்தார். எனவே ஜூனியர் கிரிக்கெட் நாட்களிலிருந்து நான் அவரைப் பார்த்து வருகிறேன், அவரையும் இஷாந்த் சர்மாவையும் டெல்லி அணிக்காக தேர்வு செய்ய வைத்தது நான்.

19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியில் அவர்கள் ஆடிக்கொண்டிருந்ததால், டெல்லி ரஞ்சி அணிக்கு அவர்களை எடுக்க டெல்லி கிரிக்கெட் சங்கம் தயக்கம் காட்டியது. நான் தான், விராட் கோலி மற்றும் இஷாந்த் சர்மாவுக்காக வாதாடி அவர்களை டெல்லி ரஞ்சி அணியில் சேர்க்க வைத்தேன். இருவரும் ஒரே போட்டியில் களமிறங்கினர். அதன்பின்னர் நடந்தவை எல்லாம் வரலாறு என்று தெரிவித்தார்.