Aswins drift on the international rankings Sri Lankan player progress ...

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர் அஸ்வின் இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு பின்தங்கினார். இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேஸில்வுட், இங்கிலாந்தின் ஆண்டர்சன் ஆகியோர் 4-வது இடத்தில் உள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் 12 இடங்கள் முன்னேறி 26-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜிம்பாப்வே கேப்டன் கிரீம் கிரெமர் 20 இடங்கள் முன்னேறி 53-ஆவது இடத்தைப் பிடித்தார்.

பேட்ஸ்மேன்கள் தரவரிசையைப் பொறுத்தவரையில் தென் ஆப்பிரிக்காவின் ஹஷிம் ஆம்லா மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியிருக்கிறார். முன்னதாக 13-ஆவது இடத்தில் இருந்த அவர், இப்போது 6 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஜிம்பாப்வேவின் கிரேக் இர்வின் 20 இடங்கள் முன்னேறி 40-வது இடத்தையும், சிக்கந்தர் ராஸா 28 இடங்கள் முன்னேறி 48-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்ததன் மூலம் தனது அதிகபட்ச தரவரிசையை எட்டியுள்ளார் சிக்கந்தர் ராஸா.

ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கையின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த குணரத்னே 19 இடங்கள் முன்னேறி 79-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர்.

இந்திய வீரர்களில் சேதேஷ்வர் புஜாரா 4-வது இடத்திலும், விராட் கோலி 5-வது இடத்திலும், கே.எல்.ராகுல் 10-வது இடத்திலும் உள்ளனர்.

ஆல்ரவுண்டர்கள் தரவரிசையைப் பொறுத்தவரையில் வங்கதேசத்தின் ஷகிப் அல்ஹசன், இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.