Asian Badminton India Saina Pranai progress to the semi finals Sindhu Srikanth lost
ஆசிய பாட்மிண்டன் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் மற்றும் பிரணாய் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். அதேநேரத்தில் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் தோல்வியுற்று வெளியேறினர்.
ஆசிய பாட்மிண்டன் சாம்பியன் போட்டி சீனாவின் வூஹான் நகரில் நடந்து வருகின்றன. இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற காலிறுதிக்கு போட்டிகள் நேற்று நடந்தன.
காமன்வெல்த்தில் தங்கம் வென்ற சாய்னா தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார். ஒற்றையர் காலிறுதியில் அவர் 21-15, 21-13 என்ற செட் கணக்கில் தென்கொரியாவின் லீ ஜங் மியை 48 நிமிடங்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
அடுத்ததாக சீன தைபே டைஸ் சுங் - சீனாவின் ஹெ பிங்ஜியோ ஆகியோர் இடையிலான ஆட்டத்தில் வெல்பவரை சாய்னா எதிர்கொள்வார்.
மற்றொரு ஆட்டத்தில் பி.வி.சிந்து 19-21, 10-21 என்ற கணக்கில் தென் கொரியாவின் சுங் ஜி ஹுயுனிடம் தோல்வியுற்று போட்டியில் இருந்து வெளியேறினார்.
அதேபோன்று ஆடவர் காலிறுதி சுற்றுப் போட்டியில் இந்தியாவின் எச்எஸ். பிரணாய் 18-21, 23-21, 21-12 என்ற செட் கணக்கில் கொரியாவின் சன் ஹோவை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு போட்டியில் ஸ்ரீகாந்த் 11-21, 15-21 என்ற செட் கணக்கில் மலேசியாவின் லீ சொங் வெயிடம் தோல்வியுற்று போட்டியில் இருந்து வெளியேறினார்.
