ashwin is the world best spin bowler praised muralitharan
தற்போதைய சூழலில் உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தான் என சுழல் மன்னன் முத்தையா முரளிதரன் புகழாரம் சூட்டியுள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், தனது 300வது விக்கெட்டையும் வீழ்த்தினார். அந்த போட்டி அஸ்வினின் 54வது டெஸ்ட் போட்டி ஆகும். அதன்மூலம் மிக விரைவாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார்.

இதற்கு முன்னதாக 1981-ல் ஆஸ்திரேலிய வீரர் டெனிஸ் லில்லி, 56 டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தியதே மிக விரைவான 300வது விக்கெட்டாக இருந்தது. இந்த வரிசையில் சுழல் மன்னர்களான முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே ஆகியோர்கூட பின்னணியில்தான் உள்ளனர்.
இந்நிலையில், இந்திய சுழல் நாயகன் அஸ்வினை இலங்கை அணியின் முன்னாள் சுழல் மன்னரான முத்தையா முரளிதரன் புகழ்ந்துள்ளார்.

நான் அஸ்வினை பாராட்ட நினைக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்துவது அவ்வளவு எளிய காரியம் இல்லை. தற்போதைய சூழலில் உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் தனது 30களில் விளையாடிக் கொண்டிருக்கிறார். இன்னும் நான்கைந்து ஆண்டுகளுக்கு அவர் விளையாடலாம். அதற்குள் முடிந்தவரை பல சாதனைகளைப் படைக்கவேண்டும் என முரளிதரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
