இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி புணேவில் இன்று தொடங்கியது.

தொடர்ச்சியாக 6 டெஸ்ட் தொடர்களைக் கைப்பற்றியுள்ள கோலி தலைமையிலான இந்திய அணி, 7-ஆவது டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. வீராட் கோலியின் தலைமையில் நடந்த போட்டிகளில் 19 போட்டிகளில் இந்தியா வெற்றிப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மண்ணில் அதிக தொடர்களை இந்தியாவே கைப்பற்றியுள்ளது என்ற நிலைமையில் இந்த தொடரையும் இந்தியாவே கைப்பெற்றும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதுவும், புணேவில் உள்ள எம்.சி.ஏ மைதானத்தில் போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறை. இதனால், போட்டி தொடங்குமும் இந்திய கேப்டன் கோலி, இந்த டெஸ்ட் போட்டி நினைவு தபால் தலை வெளியிட்டார்.

ஆசிய மண்ணில் கடைசியாக விளையாடிய 9 டெஸ்ட் போட்டிகளில் தோற்றுள்ள ஆஸ்திரேலிய அணி, இந்த முறை வெற்றி பெற முயற்சிக்கும். ஆனால் பலம் வாய்ந்த இந்திய அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதாக இருக்காது.

இந்திய அணி பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் மிக வலுவாக உள்ளது.
கே.எல்.ராகுல், முரளி விஜய், புஜாரா, கேப்டன் கோலி, அஜிங்க்ய ரஹானே, ரித்திமான் சாஹா போன்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் இந்திய அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.

இவர்களில் கோலி உச்சக்கட்ட ஃபார்மில் உள்ளார். கடைசியாக விளையாடிய 13 டெஸ்ட் போட்டிகளில் 1,457 ரன்கள் குவித்துள்ள கோலியின் சராசரி 80 ஆகும். கடந்த 4 தொடர்களிலும் இரட்டைச் சதமடித்துள்ள கோலி, ஆஸ்திரேலிய அணியையும் வீழ்த்துவார்.

முரளி விஜய், புஜாரா, அஜிங்க்ய ரஹானே ஆகியோரும் நல்ல ஃபார்மில் இருப்பது குறிப்பிடத்தக்கது. வங்கதேசத்துக்கு எதிராக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த ராகுல், இந்த முறை ரன் குவிக்க முயற்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்வரிசையில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

இந்திய அணி இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் என இரு வேகப்பந்து வீச்சாளர்களுடனும், அஸ்வின், ஜடேஜா, ஜெயந்த் யாதவ் என 3 சுழற்பந்து வீச்சாளர்களுடனும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 3-ஆவது சுழற்பந்து வீச்சாளராக ஆல்ரவுண்டரான ஜெயந்த் யாதவ் இடம் பெறும்போது இந்திய அணியின் பேட்டிங் மேலும் வலுவடையும்.

டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இரு இடங்களில் இருக்கும் அஸ்வினும், ஜடேஜாவும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்த சீசனில் அஸ்வின் 13 போட்டிகளில் விளையாடி 78 விக்கெட்டுகளையும், ஜடேஜா 10 போட்டிகளில் விளையாடி 49 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னர், மட் ரென்ஷா, கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், மிட்செல் மார்ஷ், மேத்யூ வேட் என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது.

ஆனால் இவர்களில் டேவிட் வார்னர், ஸ்மித் ஆகியோரைத் தவிர மற்றவர்கள் தொடர்ச்சியாக ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருவது ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவாகும். எனவே வார்னரும், ஸ்மித்தும் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த அணியின் ரன் குவிப்பு அமையும்.

அணிகள்:

இந்தியா (உத்தேச லெவன்): கே.எல்.ராகுல், முரளி விஜய், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்ய ரஹானே, ரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ்.

ஆஸ்திரேலியா (உத்தேச லெவன்): டேவிட் வார்னர், மட் ரென்ஷா, ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், மிட்செல் மார்ஷ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், ஸ்டீவ் ஓ"கீப், நாதன் லயன், ஜோஷ் ஹேஸில்வுட்.

முதலில் பேட்டிங் செய்கிறது ஆஸ்திரேலியா:

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.