Arjuna Award for cricketers Shikhar Tawan and Smriti Mandana
கிரிக்கெட் வீரர் ஷிகர் தவன் மற்றும் வீராங்கனை ஸ்மிருதி மந்தானா ஆகியோரின் பெயர்களை அர்ஜுனா விருதுக்காக பிசிசிஐ பரிந்துரைத்து உள்ளது.
பிசிசிஐ-இன் தற்காலிக செயலாளர் அமிதாப் செளத்ரி நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
"சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதுகளுக்கு கிரிக்கெட் சார்பில் ஷிகர் தவன், மந்தானா ஆகியோரது பெயர்களை பிசிசிஐ மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது என்றார்.
இந்திய அணியின் தொடக்க வீரரான தவன் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார். தற்போது ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியில் ஆடி வருகிறார்.
அதேபோன்று, 21 வயதான மந்தானா கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிச் சுற்றுக்கு இந்தியா தகுதி பெறுவதில் முக்கிய பங்கு வகித்தார்.
ஐசிசி தரவரிசைப் பட்டியலில் மந்தனா 4-ஆம் இடத்தில் உள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற தொடரில் 531 ஓட்டங்களை குவித்துள்ளார். அதனால் தான் அவர்கள் இருவரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டது" என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே அறக்கட்டளை ஒன்றுக்காக டி-20 நடப்பு உலக சாம்பியன் மேற்கிந்திய தீவுகளுடன் மோதும் உலக லெவன் அணியில் இடம் பெற ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் பெயர்களையும் பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
