பெலோ ஹோரிஜோன்ட்,
உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் பிரேசில் அணி 3–0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை தோற்கடித்தது.
32 அணிகள் இடையிலான உலக கோப்பை கால்பந்து போட்டி 2018–ம் ஆண்டு ரஷியாவில் நடக்கிறது. இதில் போட்டியை நடத்தும் ரஷியாவை தவிர எஞ்சிய அணிகள் தகுதி சுற்று மூலமே தேர்வாகும். தகுதி சுற்று போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.
தென்அமெரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்றில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும். 5–வது இடத்தை பிடிக்கும் அணி பிளே–ஆப் சுற்றில் மோதி அதன் மூலம் வாய்ப்பை பெற முடியும்.
இந்த நிலையில் உலக கோப்பை தென்அமெரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்றின் ஒரு ஆட்டத்தில் பரம போட்டியாளர்களான முன்னாள் சாம்பியன்கள் பிரேசிலும், அர்ஜென்டினாவும் நேற்று முன்தினம் இரவு மோதின. பார்சிலோனா கிளப்புக்காக ஒன்றாக கைகோர்த்து விளையாடிய நட்சத்திர வீரர்கள் நெய்மாரும் (பிரேசில்), லயோனல் மெஸ்சியும் (அர்ஜென்டினா) சர்வதேச களத்தில் நேருக்கு நேர் மல்லுகட்டியதால் இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
முதல் நிமிடத்திலேயே அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சியை இடறி விட்டதால் பிரேசில் வீரர் பெர்னான்டினோ மஞ்சள் அட்டை எச்சரிக்கைக்கு உள்ளானார். இப்படி பரபரப்பாக தொடங்கிய இந்த மோதலில் 23–வது நிமிடத்தில் அர்ஜென்டினாவுக்கு கோல் வாய்ப்பு உருவானது. அந்த அணியின் லுகாஸ் பிக்லியா அடித்த ஷாட்டை, பிரேசில் கோல் கீப்பர் அலிசன் முறியடித்தார்.
இதன் பிறகு பிரேசிலின் கை ஓங்கியது. 24–வது நிமிடத்தில் பிலிப் கோடினோ, 45–வது நிமிடத்தில் நெய்மார், 59–வது நிமிடத்தில் பாவ்லினோ ஆகியோர் பிரேசில் அணிக்காக அடுத்தடுத்து கோல் போட்டு உள்ளூர் ரசிகர்களை மகிழ்ச்சியில் மிதக்க வைத்தனர். அர்ஜென்டினாவால் கடைசி வரை ஒரு கோல் கூட திருப்ப முடியவில்லை. முடிவில் பிரேசில் அணி 3–0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது. பிரேசில் தொடர்ச்சியாக சுவைத்த 5–வது வெற்றி இதுவாகும். நெய்மாருக்கு இது 50–வது கோல் (74 ஆட்டம்) என்பது சிறப்பு அம்சமாகும்.
மற்ற ஆட்டங்களில் பெரு 4–1 என்ற கோல் கணக்கில் பராகுவேயையும், உருகுவே 2–1 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரையும், வெனிசுலா 5–0 என்ற கோல் கணக்கில் பொலிவியாவையும் தோற்கடித்தன. கொலம்பியா–சிலி இடையிலான ஆட்டம் கோல் இன்றி டிரா ஆனது.
இந்த பிரிவில் பிரேசில் 24 புள்ளிகளுடன் (7 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வி) முதலிடத்தில் நீடிக்கிறது. உருகுவே (23 புள்ளி), கொலம்பியா (18 புள்ளி) அடுத்த இரு இடங்களில் உள்ளன. கடந்த 4 ஆட்டங்களில் ஒரு வெற்றியும் பெறாத அர்ஜென்டினா 16 புள்ளிகளுடன் (4 வெற்றி, 4 டிரா, 3 தோல்வி) 6–வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணிகளும் இன்னும் தலா 7 ஆட்டங்களில் விளையாட வேண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
