Appointment of scientific advisers to the Indian hockey team
உலகக் கோப்பை மற்றும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வலைகோல் பந்தாட்ட (ஹாக்கி) அணிகள் சிறப்பாகச் செயல்படும் வகையில், சீனியர் மற்றும் ஜூனியர் அணிகளுக்கென 4 அறிவியல் பூர்வ ஆலோசகர்களை ஹாக்கி இந்தியா அமைப்பு நியமித்துள்ளது.
சீனியர் ஆடவர் அணிக்கான தேசிய முகாம் பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் (எஸ்ஏஐ) முகாமில் நேற்றுத் தொடங்கியுள்ள நிலையில், அந்த அணிக்கான அறிவியல்பூர்வ ஆலோசகராக ஆஸ்திரேலியாவின் ஸ்காட் கான்வே பொறுப்பேற்றுள்ளார்.
அதேவேளையில், ஜூனியர் ஆடவர் அணிக்கான அறிவியல்பூர்வ ஆலோசகராக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ராபின் அந்தோணி வெப்ஸ்டர் அர்கெல் பொறுப்பேற்க உள்ளார்.
இந்த நிலையில், சீனியர் மகளிர் ஹாக்கி அணிக்கான அறிவியல்பூர்வ ஆலோசகராக வேய்ன் பேட்ரிக் லோம்பார்ட் பொறுப்பேற்க உள்ளார்.
ஆஸ்திரேலியாவின் டேனியல் பேர்ரி ஜூனியர் மகளிர் அணிக்கான அறிவியல்பூர்வ ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, ஹாக்கி இந்தியா செயலாளர் முஷ்டாக் அகமது கூறியது:
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற வெளிநாட்டு பயிற்சியாளர்கள் நியமனம் குறித்த தேர்வுக் குழு கூட்டத்தின்போது ஸ்காட், ராபின், வேய்ன், டேனியல் ஆகியோரது பெயர்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தகுந்த அனுபவமும், அறிவும் வாய்ந்த இவர்கள் நால்வரும் உலகக் கோப்பை போட்டி மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தனது இலக்கை எட்டுவதற்கு உறுதுணையாக இருப்பார்கள் என நம்புகிறோம். இந்திய அணியினர் போட்டிக்கு உகந்த வகையில் தங்களது உடல்தகுதியை மேம்படுத்திக் கொள்வதற்கான ஆலோசனைகளை இவர்கள் வழங்குவார்கள்” என்று முஷ்டாக் அகமது கூறினார்
