தனக்கும் கணவர் விராட் கோலிக்கும் இடையேயான குடும்ப உறவு வலுவாக இருப்பதற்கான காரணத்தை பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா பகிர்ந்துள்ளார்.

இந்திய அனியின் கேப்டன் விராட் கோலிக்கும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இதையடுத்து இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகின்றனர். இருவருமே அவரவர் துறைகளில் கொடிகட்டி பறந்தாலும் அது அவர்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை பாதித்ததில்லை. தங்களது தொழில் சார்ந்த விஷயங்கள், குடும்ப வாழ்க்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதவாறு பார்த்துக்கொள்கின்றனர். 

பரஸ்பர புரிதலில் இருவரும் பரஸ்பரம் அவரவர் தொழில் சார்ந்த சுதந்திரத்துடன் செயல்படுகின்றனர். இருவரும் ஒருவரை ஒருவர் தனிப்பட்ட முறையில் தொந்தரவு செய்யாததால்தான் அவர்களது வாழ்க்கை சிறப்பாக உள்ளது. 

தங்களது குடும்ப உறவு குறித்து பகிர்ந்துள்ள அனுஷ்கா சர்மா, இருவரும் தங்களது தொழில்கள் எந்த வகையிலும் குடும்ப வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தாதவாறு பார்த்துக்கொள்வதாகவும் அதுதான் அவர்களின் குடும்ப உறவை வலுவாக்குவதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும் பேசிய அவர், நாங்கள் இருவருமே எங்கள் தொழிலை மிகவும் நேசிக்கிறோம். எங்கள் வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது எங்களுக்கு தெரியும். அதேநேரத்தில் இருவரும் இணைந்து இருப்பதற்கான நேரத்தையும் முடிந்தவரை திட்டமிட்டு ஒதுக்குகிறோம். எங்களது தொழிலையோ அல்லது வாழ்க்கையையோ நாங்கள் மிகவும் சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை. நாங்கள் மிகவும் எளிமையானவர்கள். சாதாரண விஷயங்களை செய்கிறோம். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் நாங்கள் பிரபலங்களாக தெரியலாம். ஆனால் நாங்கள் சாதாரணமானவர்கள். அதுமட்டுமல்லாமல் இருவரும் ஒருவரை ஒருவர், எங்களது தொழில்சார்ந்து பார்த்துக்கொள்வதில்லை என அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.