ஹர்பஜன் சிங் தன்னை குரங்கு என்று அழைத்ததற்கு பிறகு தான் தனது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாகவும் தான் குடிகாரனாக ஆனதற்கும் அதுதான் காரணம் என்றும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் அந்த அணியின் சிறந்த ஆல்ரவுண்டராக இருந்தவர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ். சைமண்ட்ஸ் சர்ச்சைகளுக்கும் சொந்தக்காரர். இவர் 2008ம் ஆண்டு நடந்த சம்பவத்தை மீண்டும் நினைவுகூர்ந்து சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

2007-08ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி, கும்ப்ளே தலைமையில் டெஸ்ட் போட்டிகளில் ஆடியது. அந்த தொடரில் நடுவர்களின் தவறான முடிவுகளால் இந்திய அணி தொடரை இழக்க நேரிட்டது. அந்த தொடர் முழுவதும் 14 தீர்ப்புகள் இந்திய அணிக்கு எதிராக நடுவர்களால் வழங்கப்பட்டது. அதில் சுமார் 10 தவறான தீர்ப்புகள் சைமன்ட்ஸுக்கு சாதமாக வழங்கப்பட்டவை. சைமண்ட்ஸுக்கு 10 முறை அவுட் வழங்கப்படவில்லை. 

இந்நிலையில், அந்த நேரத்தில் அம்பயரின் தவறான முடிவுகள் குறித்த சர்ச்சை கிளம்ப, அதை அடக்கும் விதமாக வேறு ஒரு சர்ச்சையை கிளப்பிவிட்டனர் ஆஸ்திரேலிய வீரர்கள். அது சைமண்ட்ஸ் செய்த காரியம்தான். தன்னை ஹர்பஜன் சிங் மங்கி(குரங்கு) என்று அழைத்ததாக குற்றம்சாட்டினார். இந்த சர்ச்சை வெடித்தது. இந்த பிரச்னையை சச்சின் தலையிட்டு சுமூகமாக முடித்துவைத்தார். இந்த பிரச்னை சுமூகமாக முடியவில்லை என்றால், தொடரை பாதியில் முடித்துக்கொண்டு இந்திய அணியை நாடு திரும்பச்செய்ய பிசிசிஐ தயாராக இருந்த நிலையில், அந்த பிரச்னையை முடித்துவிட்டது ஆஸ்திரேலியா.

ஆனால் சைமண்ட்ஸை குரங்கு என்று அழைக்கவில்லை என்று ஹர்பஜன் சிங் மறுத்தார். அந்த பிரச்னை அத்துடன் முடிந்துவிட்டது. அதன்பிறகு குடி மற்றும் ஒழுங்கீன செயல்பாடுகளின் காரணமாக சைமண்ட்ஸ் அணியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். அதன்பிறகு ஐபிஎல்லில் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து ஆடியுள்ள சைமண்ட்ஸ் மீண்டும் தற்போது அந்த விவகாரத்தை கிளப்பியுள்ளார். 

ஹர்பஜன் சிங் தன்னை அந்த ஒருமுறை மட்டும் குரங்கு என்று கூறியதில்லை. இந்தியாவில் ஆடியபோதும் ஒன்றிரண்டு முறை அதேபோல் என்னை குரங்கு என்று அழைத்துள்ளார். அவர் என்னை குரங்கு என்று அழைத்ததன் பிறகு எனது கிரிக்கெட் வாழ்க்கையே முடிவுக்கு வந்தது. அதிகமாக குடிக்க ஆரம்பித்தேன். அதனால் குடும்ப வாழ்க்கையிலும் பிரச்னை வந்தது. நான் அதிகமாக குடித்ததற்கு ஹர்பஜன் சிங் தன்னை குரங்கு என்று அழைத்ததுதான் காரணம் என்பதாக கூறியுள்ளார். சைமண்ட்ஸ். 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பிரச்னையை இன்னும் பேசிவருகிறார் சைமண்ட்ஸ்.