analysis on ipl play off chances

ஐபிஎல் 11வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய இரண்டு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. பிளே ஆஃபிற்கு தகுதி பெறும் வாய்ப்பை ஏற்கனவே டெல்லி இழந்துவிட்டது. தற்போது நெட் ரன்ரேட்டில் மிகவும் பின் தங்கி இருக்கும் பஞ்சாப் அணியும் இனிமேல் பிளே ஆஃபிற்கு தகுதி பெற வாய்ப்பில்லை. 

எனவே மூன்று மற்றும் நான்கு ஆகிய இரண்டு இடங்களுக்கு மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

கொல்கத்தா அணி 13 போட்டிகளில் ஆடி, 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளை பெற்றுள்ளது. மும்பை, ராஜஸ்தான், பெங்களூரு ஆகிய மூன்று அணிகளுமே 13 போட்டிகளில் ஆடி 12 புள்ளிகளை பெற்றுள்ளது. பஞ்சாப் அணியும் 13 போட்டிகளில் ஆடி 12 புள்ளிகளை பெற்றுள்ளது. ஆனால் பஞ்சாப் அணியின் நெட் ரன்ரேட் மிகவும் குறைவாக உள்ளது.

இப்போது எந்த அணிக்கு வாய்ப்பு என்பதை பற்றி பார்ப்போம்..

கொல்கத்தா அணிக்கான வாய்ப்பு:

கொல்கத்தா அணிக்கு இன்னும் ஒரு போட்டி உள்ளது. அந்த போட்டியில் கொல்கத்தா அணி ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் கொல்கத்தா அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.

இல்லையெனில் மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்து கொல்கத்தா அணிக்கான வாய்ப்பு அமையும்.

மும்பை அணிக்கான வாய்ப்பு:

மும்பை அணி, எஞ்சியுள்ள ஒரு போட்டியில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மும்பை அணி 14 புள்ளிகளை பெற்று பிளே சுற்றுக்கு தகுதி பெறும். மற்ற அணிகளின் வெற்றி தோல்வி மும்பையை பாதிக்காது. ஏனெனில் மும்பை அணியின் நெட் ரன்ரேட் அதிகமாக உள்ளது.

ஆனால் தோற்றுவிட்டால் வாய்ப்பை இழந்துவிடும். ஏனெனில் மும்பையை போன்றே வெற்றி கட்டாயத்தில் இருக்கும் பெங்களூரு அணியும் ராஜஸ்தான் அணியும் அவற்றின் கடைசி போட்டியில் மோதுகின்றன. இந்த போட்டியில் இரு அணிகளில் ஒன்று வெற்றி பெற்றால், அந்த அணி 14 புள்ளிகளுடன் உள்ளே நுழையும். எனவே மும்பை அணி டெல்லிக்கு எதிரான போட்டியில் வென்றே தீர வேண்டும். 

பெங்களூரு - ராஜஸ்தான் அணிக்கான வாய்ப்பு:

இரண்டு அணிகளுக்குமே ஒரு போட்டி எஞ்சியுள்ளது. அந்த போட்டியில் இந்த இரண்டு அணிகளும் மோதுகின்றன. எனவே எப்படியும் ஒரு அணி வெற்றி பெற்றுத்தான் தீரும். வெற்றி பெறும் அந்த அணி 14 புள்ளிகளை பெறும். ஆனால் மும்பை டெல்லியையும், கொல்கத்தா ஹைதராபாத்தையும் வீழ்த்திவிட்டால், மும்பையும் கொல்கத்தாவும் பிளே ஆஃபிற்குள் நுழைந்துவிடும். பெங்களூருவும் ராஜஸ்தானும் வெளியேறிவிடும்.

மும்பை அணி தோற்றால்தான் இந்த இரண்டு அணிகளில் ஒன்று பிளே ஆஃபிற்குள் நுழைய முடியும்.