செர்பியாவைச் சேர்ந்த முன்னாள் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனையான அனா இவானோவிச் உடற்தகுதி பிரச்சனை காரணமாக சர்வதேச டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இவானோவிச் (29), 2008-இல் பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றார். அதுதான் அவர் வென்ற ஒரே கிராண்ட்ஸ்லாம் பட்டம். அப்போது அவர் தரவரிசையிலும் முதலிடத்தைப் பிடித்தார்.
அதன்பிறகு சிறப்பாக ஆடி வந்தபோதிலும், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து காயமடைந்து வந்த இவானோவிச், இப்போது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, “தொழில்முறை டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவது என முடிவெடுத்துள்ளேன். இது கடினமான முடிவுதான். ஆனால் என் வாழ்வில் கொண்டாடுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன.
2008-இல் பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றபோது உலகின் முதல் நிலை வீராங்கனையாக உருவெடுத்தேன். கிராண்ட்ஸ்லாம் பட்டம், தரவரிசையில் முதலிடம் ஆகிய இரு விஷயங்களுமே நான் கனவிலும் நினைத்துப் பார்க்காதவை. ஆனால் அதை சாதித்தேன்.
இதுவரை 15 டபிள்யூடிஏ போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளேன். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 3 முறை இறுதிச்சுற்று வரை முன்னேறியிருக்கிறேன். ஃபெடரேஷன் கோப்பை போட்டி மற்றும் மறக்க முடியாத சில போட்டிகளிலும் விளையாடியிருக்கிறேன்.
எந்தவொரு தொழில்முறை விளையாட்டுக்கும் உடற்தகுதி மிக முக்கியமானதாகும். ஆனால் நான் தொடர் காயங்களால் அவதிக்குள்ளானேன். எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாதபட்சத்தில் என்னால் விளையாட முடியாது. என்னால் இப்போது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. அதனால் ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான தருணம்” என்றுத் தெரிவித்தார்.
