அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜுவான் மார்டின் டெல் போட்ரோ, ரஃபேல் நடால், கோகோ வான்டெவெக், மேடிசன் கீஸ் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் ஐந்து முறை சாம்பியனான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், போட்டித் தரவரிசையில் 24-வது இடத்தில் இருக்கும் டெல் போட்ரோவை சந்தித்தார்.

இந்த ஆட்டத்தில் 7-5, 3-6, 7-6(8), 6-4 என்ற செட் கணக்கில் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி வெற்றிப் பெற்றார் டெல் போட்ரோ.

ஃபெடரர் 2017-ஆம் ஆண்டு கிராண்ட்ஸ்லாம் சீசனில் சந்திக்கும் முதல் தோல்வி இதுவாகும்.

முன்னதாக, கடந்த 2009-ஆம் ஆண்டு அமெரிக்க ஓபனில் ஃபெடரரை வீழ்த்தி பட்டம் வென்றிருந்தார் டெல் போட்ரோ. அதையடுத்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க ஓபனில் மீண்டும் ஃபெடரரை சந்தித்த டெல் போட்ரோ, காலிறுதியிலேயே அவரை வெளியேற்றியுள்ளார்.

அதேபோல், அந்த சீசனின் அரையிறுதியில் நடாலை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய டெல் போட்ரோ, இந்த சீசனிலும் அரையிறுதியில் நடாலை சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால், ரஷியாவின் ஆன்ட்ரு ருபலேவை சந்தித்தார்.

அதில், 6-1, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ஆன்ட்ரு ருபலேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் நடால்.

போட்டித் தரவரிசையில் 20-வது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் கோகோ வான்டெவெக், 7-6(4), 6-3 என்ற செட் கணக்கில் கரோலினாவை வீழ்த்தினார்.

இதேபோல், மற்றொரு காலிறுதியில், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் எஸ்டோனியாவின் கையா கானேபியை வீழ்த்தினார்.

இதையடுத்து, இரண்டு அரையிறுதி ஆட்டங்களிலும் மோதும் நான்கு வீராங்கனைகளுமே அமெரிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதில் ஒன்றில் வீனஸ் வில்லியம்ஸ் - ஸ்லோன் ஸ்டீபன்ஸும், மற்றொன்றில் கோகோ வான்டெவெக் - மேடிசன் கீஸும் மோதுகின்றனர்.