அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், நட்சத்திர வீரர்களான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஸ்பெயினின் ரஃபேல் நடால், ஆஸ்திரியாவின் டொமினிக் தீம், ஜெர்மனியின் ஃபிலிப் கோல்ஷ்ரைபர், பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸ், பெல்ஜியத்தின் டேவிட் காஃபின் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி உலகின் 3-ஆம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் தனது 2-வது சுற்றில் ரஷியாவின் மிகைல் யூஸ்னியை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் ஃபெடரர் 6-1, 6-7(7), 4-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் யூஸ்னியை வீழ்த்தி தனது அமெரிக்க ஓபன் வரலாற்றில் 80-வது வெற்றியை பெற்றார் ஃபெடரர்.

இத்துடன் யூஸ்னியை 17 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ள ஃபெடரர், அந்த 17 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளார்.

ஃபெடரர் தனது 3-வது சுற்றில் ஸ்பெயினின் ஃபெலிஸியானோ லோபஸை சந்திக்கிறார்.

மற்றொரு 2-வது சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் 4-6, 6-3,6-2,6-2 என்ற செட் கணக்கில் ஜப்பானின் டேரோ டேனியலை வீழ்த்தினார்.

அவர் தனது 3-வது சுற்றில் ஆர்ஜென்டீனாவின் லியானார்டோ மேயரை எதிர்கொள்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் 6-4, 6-4, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸை வீழ்த்தினார்.

ஜெர்மனியின் ஃபிலிப் கோல்ஷ்ரைபர் 6-2, 6-1, 3-0 என்ற செட் கணக்கில் கொலம்பியாவின் சான்டியாகோ கிரால்டோவை தோற்கடித்தார். 

பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸ் 6-3, 6-7(7), 6-4, 2-6, 7-5 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் டொனால்ட் யங்கையும், பெல்ஜியத்தின் டேவிட் காஃபின் 3-6, 7-6(5), 6-7(7), 7-6(4), 6-3 என்ற செட் கணக்கில் ஆர்ஜென்டீனாவின் குய்டோ பெல்லாவையும் வீழ்த்தினர்.