ராகுல் டிராவிட்டை மிக மோசமாக ஸ்லெட்ஜிங் செய்ததற்கு 22 ஆண்டுகள் கழித்து மனம் வருந்தியுள்ளார் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்டு. 

கிரிக்கெட்டில் ஸ்லெட்ஜிங் செய்வது வழக்கம். அதுவும் 1990களில் ஸ்லெட்ஜிங் மிக மோசமாக இருந்தது. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இந்தியா என அனைத்து அணிகளுமே எதிரணி வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தன. 

ஆனால் கிரிக்கெட் உலகின் ஜெண்டில் மேன்களில் ஒருவராக அறியப்படுபவர் ராகுல் டிராவிட். தனது மன உறுதி, ஒழுக்கம், அடக்கம் ஆகியவற்றால் அடுத்தடுத்த தலைமுறை வீரர்களுக்கான முன்னோடியாக திகழ்பவர். அவரை ஸ்லெட்ஜிங் செய்த தருணத்தை நினைத்து 22 ஆண்டுகளுக்கு பிறகு மனம் வருந்தி வேதனைப்பட்டுள்ளார் ஆலன் டொனால்டு. 

பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது, தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஃபெலுக்வாயோவை நிற ரீதியாக இழிவாக பேசி 4 போட்டிகள் தடை பெற்றார். இதுபோன்ற சம்பவங்கள் வருந்தத்தக்கவை. இந்த சம்பவம் நடந்திருக்கும் இந்த வேளையில், தனது கிரிக்கெட் வாழ்வின் மோசமான தருணத்தை பகிர்ந்துகொண்டுள்ளார் ஆலன் டொனால்டு. 

இதுகுறித்து பேசிய டொனால்டு, 1997ல் நடந்த முத்தரப்பு தொடரில் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது இறுதி போட்டியில், ராகுல் டிராவிட்டை மிகவும் மோசமாக ஸ்லெட்ஜிங் செய்தேன். ஆனால் அந்த நேரத்தில் டிராவிட்டின் விக்கெட் தேவைப்பட்டது. நான் ஸ்லெட்ஜிங் செய்ததற்கு இரண்டு ஓவர்களுக்கு பிறகு டிராவிட் அவுட்டாகிவிட்டார். அந்த போட்டியில் நாங்கள் வெற்றியும் பெற்றோம். ஆனால் நான் ராகுல் டிராவிட்டை ஸ்லெட்ஜிங் செய்த அந்த தருணம் தான் என் கிரிக்கெட் வாழ்வின் மோசமான தருணமாக கருதுகிறேன். அந்த போட்டிக்கு பின்னர் ராகுல் டிராவிட்டிடம் பேச முயன்றேன். ஆனால் அவர் என்னிடம் பேச மறுத்துவிட்டார் என்று ஆலன் டொனால்டு தனது வருத்தத்தை பகிர்ந்துள்ளார். 

1997ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடர் நடந்தது. இறுதி போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இரண்டு இறுதி போட்டிகள் நடந்தன. முதல் போட்டி முடிவில்லாமல் முடிந்த நிலையில், டர்பனில் நடந்த இரண்டாவது இறுதி போட்டியில், தென்னாப்பிரிக்க அணி 278 ரன்களை குவித்தது. இந்திய அணிக்கு டக்வொர்த் லெவிஸ் முறைப்படி 252 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை விரட்டிய இந்திய அணியில் ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய மறுமுனையில் நங்கூரமிட்டு ஆடி அரைசதம் அடித்த ராகுல் டிராவிட், அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். அப்போது அபாரமாக ஆடிக்கொண்டிருந்த டிராவிட்டை டொனால்டு ஸ்லெட்ஜிங் செய்தார். அதன்பிறகு 85 ரன்களில் டிராவிட் ஆட்டமிழந்தார். தென்னாப்பிரிக்க அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த சம்பவத்தைத்தான் ஆலன் டொனால்டு பகிர்ந்துள்ளார்.