காமன்வெல்த போட்டியின் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் அனைத்து இந்திய இணைகளும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி அசத்தி உள்ளனர்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை கோல்ட்கோஸ்ட் நகரில் தொடங்கின. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர். 

இந்தியா சார்பில் 220 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், ஹாக்கி, குத்துச்சண்டை, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்றவற்றில் இந்தியா பதக்கங்கள் வென்று குவித்து வருகின்றது.

இதன் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்களான சரத் கமல் - சத்யன் ஞானசேகரன் இணை 3-0 என்ற செட் கணக்கில் கிரிபாட்டியின் தரோமா மில்டா - நூவா டக்கூ இணையை வென்றது. 

அதேபோன்று ஹர்மீத் தேசாய் - சனில் சங்கர் இணை 3-0 என்ற செட் கணக்கில் கயானாவின் ஷெமர் பிரிட்டன் - கிறிஸ்டோபர் பிராங்களின் இணையை வென்றது. 

மற்றொரு பிரிவான மகளிர் பிரிவில் பூஜா - சுதிர்தா முகர்ஜி இணை 3-0 என்ற செட்கணக்கில் மொரிஷியஸின் ருய்யாகீனு - சஞ்சனா ராமசாமி இணையை வென்றது. 

இதன்மூலம் இரட்டையர் பிரிவில் அனைத்து இந்திய இணைகளும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.