அகில இந்திய வாலிபால் போட்டியில் ஆண்கள் பிரிவில் தெற்கு இரயில்வே அணியும், பெண்கள் பிரிவில் கேரள காவல் அணியும் முதலிடத்தைப் பிடித்தன.

26-வது அகில இந்திய வாலிபால் போட்டி தூத்துக்குடியில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட கைப்பந்துக் கழகமும், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியும் இணைந்து நடத்திய மெர்கன்டைல் வங்கி கோப்பைக்கான இந்த போட்டிகள், கடந்த 20 ஆம் தேதி தொடங்கி 6 நாள்கள் நடைபெற்றன.

இறுதிப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றன. மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில், கேரள காவல் அணியும், கேரள சாய் அணியும் மோதின. 

இதில், 25-20, 22-25, 25-19, 26-24 என்ற புள்ளிகளைப் பெற்று கேரள காவல் அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

அதேபோன்று, ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் தெற்கு இரயில்வே அணியும், சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக அணியும் மோதின. 

இதில், 25-14, 25-20, 35-33 என்ற புள்ளிகள் கணக்கில் தெற்கு இரயில்வே அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் கே.வி. ராமமூர்த்தி பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளையும், ரொக்கப் பரிசுகளையும் வழங்கினார். மேலும், சிறந்த விளையாட்டு வீரர், வீராங்களைகளுக்கும் சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில கைப்பந்துக் கழக பொதுச் செயலர் ஏ.கே. சித்திரைபாண்டியன், சென்னை மாவட்ட கைப்பந்துக் கழக தலைவர் ஆர்.அர்ஜுன் துரை, 

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் இயக்குநர்கள் விக்ரமன், சி.எஸ். ராஜேந்திரன், சி.எஸ்.ஆர். அரவிந்த்குமார், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பொது மேலாளர் ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.