All India basketball champions won the championship of Chennai Kerala
அகில இந்திய கூடைப்பந்துப் போட்டியின் ஆடவர் பிரிவில் சென்னை சுங்கத் துறையும், மகளிர் பிரிவில் கேரள மின் வாரிய அணியும் சாம்பியன் பட்டம் வென்றன.
கோவையில் நாச்சிமுத்து கௌண்டர் கோப்பைக்கான 53-வது ஆடவர் கூடைப்பந்துப் போட்டி, சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பைக்கான 17-வது மகளிர் கூடைப்பந்துப் போட்டிகள் கோவை மாவட்டம், வ.உ.சி. பூங்கா மைதானத்தில் கடந்த 26-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தன.
இதில், ஆடவர் பிரிவில் பஞ்சாப் காவல், டெல்லி இந்திய விமானப் படை, சென்னை சுங்கத்துறை, சென்னை அரைஸ் ஸ்டீல், டெல்லி இந்திய இரயில்வே, பெங்களூரு ராணுவ சேவைப் பிரிவு, டெல்லி வருமான வரித் துறை அணி, கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழகம் ஆகிய எட்டு அணிகள் இடம்பெற்றிருந்தன.
அதேபோன்று, மகளிர் பிரிவில் கொல்கத்தா கிழக்கு இரயில்வே, கேரள காவல் துறை, ஹூப்ளி தென் மேற்கு இரயில்வே, சென்னை அரைஸ் ஸ்டீல்ஸ், மைசூரு ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல், கேரள மின் வாரியம், தமிழ்நாடு ஜூனியர்ஸ், கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழகம் ஆகிய அணிகளும் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற ஆடவர் பிரிவு இறுதி ஆட்டத்தில், சென்னை சுங்கத் துறை அணி 69-63 என்ற புள்ளிக் கணக்கில் டெல்லி இரயில்வே அணியைத் தோற்கடித்தது.
மகளிர் பிரிவு இறுதி ஆட்டத்தில் கேரள மின் வாரிய அணி 59 - 43 என்ற புள்ளிக் கணக்கில் கொல்கத்தா கிழக்கு இரயில்வே அணியை வீழ்த்தியது.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், மாநகர காவல் துணை ஆணையர் ஜி.தர்மராஜன், சென்னை சுங்கத் துறை அணிக்கு ரூ.1 இலட்சம் மற்றும் சுழற்கோப்பையும், இரண்டாவது இடம் பிடித்த டெல்லி இரயில்வே அணிக்கு ரூ.50 ஆயிரமும், டாக்டர் என்.மகாலிங்கம் கோப்பையையும் வழங்கினார். அரையிறுதியில் தோல்வியடைந்த விமானப் படை, பெங்களூரு இராணுவ சேவை அணிக்கு தலா ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது.
மகளிர் பிரிவில் வெற்றி பெற்ற கேரள மின் வாரிய அணிக்கு ரூ.50 ஆயிரமும், சுழற்கோப்பையும், இரண்டாவது இடம் பிடித்த கொல்கத்தா கிழக்கு ரயில்வே அணிக்கு ரூ.25 ஆயிரமும், கோப்பையும் வழங்கப்பட்டன. அரையிறுதியில் தோல்வி அடைந்த கேரள காவல் துறை, தமிழ்நாடு ஜூனியர் அணிக்கு தலா ரூ.10 ஆயிரமும், பரிசும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழகத் தலைவரும், சி.ஆர்.ஐ. குழுமங்களின் இணை நிர்வாக இயக்குநருமான ஜி.செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
