ஆயுதக் கடத்தல் குற்றச்சாட்டில்  சிறையில் இருந்த இரண்டு நாட்களும் தனது வாழ்க்கையில் மிகவும் மோசமான நாட்கள் என தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரருமான் ஆல்பி மோர்கல் தெரிவித்துள்ளார். 

தென்னாப்பிரிக்க வீரர் ஆல்பி மோர்கல். ஆல்ரவுண்டரான இவர், தென்னாப்பிரிக்க அணியில் 2004ம் ஆண்டிலிருந்து 2012ம் ஆண்டு வரை ஆடினார். ஐபிஎல்லில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2008ம் ஆண்டிலிருந்து 2013ம் ஆண்டுவரையிலான 6 சீசன்களில் ஆடினார்.

இவர் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்காவில் வேட்டை ஆடுவதற்காகச் சென்றபோது ஆயுதக் கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி சிறைத் தண்டனை பெற்றதாக அண்மையில் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக பேசிய ஆல்பி மோர்கல், நான் மொசாம்பிக்காவில் எனது பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பும்போது காரை சுத்தம் செய்யுமாறு தோட்டக்காரரிடம் கூறினேன். அவர் காரில் இருந்த ஒரு ஆயுதத்தைப் பார்த்து அதை எங்கு வைப்பது என்று தெரியாமல் எனது கிரிக்கெட் பையில் வைத்திருக்கிறார்.

நான் பயணத்தை முடித்து வீடு திரும்புவதற்காக விமான நிலையத்திற்கு சென்றபோது, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் எனது பையில் அந்த ஆயுதத்தைக் கைப்பற்றி, அதுதொடர்பாக விசாரித்தனர். எனக்கு அதுகுறித்து ஒன்றும் தெரியவில்லை. எனக்கு அவர்களது மொழியும் புரியவில்லை. இதன் காரணமாக நிலைமை மிகவும் மோசமாகியது. இதையடுத்து ஆயுதக்கடத்தலில் ஈடுபட்டதாக என் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.  இரண்டு நாட்கள் சிறையிலிருந்தேன். அந்த இரண்டு நாட்களும் என் வாழ்நாளில் மிகவும் மோசமான நாட்கள். பின்னர் என் நண்பர்கள் என்னை சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்தனர் என மோர்கல் தெரிவித்துள்ளார்.