அலெஸ்டர் குக் அவரது வாழ்நாளில் தன்னை மறக்கமாட்டார் என இந்திய வீரர் ஹனுமா விஹாரி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டு ஹனுமா விஹாரி அணியில் ஆட வாய்ப்பு பெற்றார். அறிமுக போட்டியிலேயே பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே நல்ல பங்களிப்பு செய்தார் ஹனுமா விஹாரி.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி இக்கட்டான நிலையில் இருந்தபோது, பொறுப்புடன் ஆடி அரைசதம் கடந்த விஹாரி, 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவரது அரைசதம் மற்றும் ஜடேஜாவின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி, கடைசி போட்டியின் முதல் இன்னிங்ஸில் 292 ரன்களை குவித்து, இங்கிலாந்தை விட 40 ரன்கள் பின் தங்கிய நிலையை எட்டியது. இவர்கள் சரியாக ஆடியிருக்காவிட்டால், வித்தியாசம் மிக அதிகமாக இருந்திருக்கும்.

அதேபோல இரண்டாவது இன்னிங்ஸில், குக்கும் ரூட்டும் சதம் விளாசி களத்தில் நங்கூரமிட்டு ஆடிக்கொண்டிருந்தனர். பும்ரா, இஷாந்த், ஷமி, ஜடேஜா ஆகிய பவுலர்கள் அந்த ஜோடியை பிரிக்க முடியாமல் திணறியபோது, ரூட் மற்றும் குக்கை அடுத்தடுத்த பந்துகளில் அவுட்டாக்கி மிரட்டினார் விஹாரி. மேலும் சாம் கரனின் விக்கெட்டையும் விஹாரி வீழ்த்தினார். இவ்வாறு முதல் போட்டியிலேயே சிறப்பாக ஆடிய விஹாரிக்கு ஹைதராபாத் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள், பேட்டை உயர்த்தி பிடித்து விஹாரியை வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஹாரி, இங்கிலாந்து டெஸ்ட் தொடர் எனக்கு நல்ல அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. அங்கு நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் எதிர்பாராத விதமாக 56 ரன்களில் ஆட்டமிழந்தேன். அது ஏமாற்றமாக இருந்தது. விராட் கோலி எனக்கு மிகுந்த நம்பிக்கை அளித்தார். பந்துவீச வேண்டும் என்று ஏற்கனவே கூறப்பட்டுவிட்டதால், அதற்கு தயாராகவே இருந்தேன். அலெஸ்டர் குக், ஜோ ரூட், சாம் கரன் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினேன். என் முதல் போட்டியிலேயே மூன்று விக்கெட் வீழ்த்தியதில் மகிழ்ச்சி. குக்கின் கடைசி விக்கெட்டை வீழ்த்தியது நான் தான் என்பதால் அவரால் என்னை மறக்கவே முடியாது என்று விஹாரி கூறினார்.