பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர், அசால்ட்டாக 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசியவர். 1997ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணியில் ஆடினார். அவரது அதிவேக பவுலிங்கின் காரணமாக ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார். 

எதிரணி பேட்ஸ்மேன்களை தனது அதிவேக பவுலிங்கால் அரளவிட்டவர் ஷோயப் அக்தர். அவரது கம்பீரமான தோற்றம், அவர் ஓடிவரும் வேகம், அவரது பந்தின் வேகம் என அனைத்துமே எதிரே நிற்கும் பேட்ஸ்மேனை மிரட்டும். 

1997ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அக்தர், 2007ம் ஆண்டுவரை 46 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 178 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.1998ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமான அக்தர், 2011 உலக கோப்பை வரை 163 போட்டிகளில் ஆடி 247 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அக்தர், கிரிக்கெட் வர்ணனையில் பிசியாக உள்ளார். அவர் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் ஆட வேண்டும் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் விரும்பினர். ஆனால் அவர் அத்தொடரில் ஆடியதில்லை. இந்நிலையில், அவர் மீண்டும் ஆட உள்ளதாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், இப்போதுள்ள இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உண்மையான ஃபாஸ்ட் பவுலிங் என்றால் என்ன காட்ட உள்ளதாக, பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

43 வயதான ஷோயப் அக்தர் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ஆட உள்ளதாக தெரிவித்துள்ளார்.