இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் கடுமையாக போராடிய இந்திய அணி கடைசி பந்தில் தோல்வியை தழுவியது. 

முதல் போட்டியில் தவானுக்கு பதிலாக கேல் ராகுல் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அரைசதம் அடித்தார் ராகுல். அந்த போட்டியில் ராகுல் மட்டுமே இந்திய அணியில் நன்றாக பேட்டிங் ஆடினார். மற்ற யாருமே சரியாக ஆடவில்லை. அந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் டக் அவுட்டானார். ரிஷப் பண்ட் 3 ரன்களில் ரன் அவுட்டானார். 

வெறும் 126 ரன்களை எடுத்த இந்திய அணி, அந்த எளிய இலக்கை எளிதாக எட்டவிடாத அளவிற்கு ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. ஆனாலும் மேக்ஸ்வெல்லின் அதிரடி அரைசதம் அந்த அணிக்கு இலக்கை எட்ட உதவிகரமாக இருந்தது. அதனால் கடைசி பந்தில் இலக்கை எட்டி வெற்றியை பறித்தது ஆஸ்திரேலிய அணி.

இந்நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியில் கண்டிப்பாக சில மாற்றங்கள் செய்யப்படும். விஜய் சங்கர் அணியில் கண்டிப்பாக சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தினேஷ் கார்த்திக் அணியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக விஜய் சங்கர் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏனெனில் ரிஷப் பண்ட் அணியிலிருந்து நீக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்பதை முதல் போட்டிக்கு பிறகான கேப்டன் கோலியின் பேச்சு உணர்த்தியது. உலக கோப்பைக்கு முன்னதாக ரிஷப் பண்ட்டுக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படும் என கோலி தெரிவித்திருந்தார். எனவே ரிஷப் பண்ட் நீக்கப்படுவதற்கு வாய்ப்பேயில்லை. அதேபோல உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு சித்தார்த் கவுல் அணியில் இணைய வாய்ப்புள்ளது. 

இந்நிலையில், இரண்டாவது போட்டிக்கான அணி குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா, இரண்டாவது போட்டியில் ரோஹித்துக்கு ஓய்வளிக்கப்பட்டு தவான் அணியில் இணைய வாய்ப்புள்ளது. சாஹல், மார்கண்டே, தோனி, குருணல் பாண்டியா ஆகியோர் அணியில் கண்டிப்பாக இருப்பர். உமேஷ் யாதவிற்கு பதிலாக சித்தார்த் கவுல் அணியில் இணைவார். விஜய் சங்கருக்கு வாய்ப்பு வழங்கப்படும். ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் ஒருவர் நீக்கப்பட்டு விஜய் சங்கர் சேர்க்கப்படுவார். நீக்கப்படும் வீரர் பெரும்பாலும் தினேஷ் கார்த்திக்காக இருப்பதற்கு வாய்ப்பு அதிகம் என்று ஜடேஜா கருத்து தெரிவித்துள்ளார்.