afridi hat trick wickets in ten over cricket
ஷார்ஜாவில் நடந்துவரும் 10 ஓவர் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சேவக் உட்பட மூவரை அடுத்தடுத்து வீழ்த்தி, தான் இன்னும் ஃபார்மில் இருப்பதை பாகிஸ்தானின் முன்னாள் ஆல் ரவுண்டர் அஃப்ரிடி நிரூபித்துள்ளார்.
ஷார்ஜாவில் கோலாகலமாகத் தொடங்கிய 10 ஓவர் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சேவக் தலைமை மராத்தா அரேபியன்ஸ் அணி, ஷாகித் அஃப்ரிடி தலைமையிலான பாக்டூன்ஸ் அணியுடன் விளையாடியது.
முதலில் பேட்டிங் செய்த அஃப்ரிடியின் பாக்டூன்ஸ் அணி 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் குவித்தது. அந்த அணியின், பகர் ஜமான் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 22 பந்துகளில் 45 ரன்களையும் டாஸன் 23 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 44 ரன்களையும் எடுத்தனர். கேப்டன் அஃப்ரிடி ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 6 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தார்.
122 ரன்கள் என்ற இலக்குடன் சேவக் தலைமையிலான மராத்தா அரேபியன்ஸ் அணி களமிறங்கியது. 10 ஓவர் ஆட்டத்தின் 5வது ஓவரை தனது முதல் ஓவராக வீசினார் அஃப்ரிடி.
முதலில் ரைலி ரூசோவை வீழ்த்தினார். அடுத்த பந்தில் டிவைன் பிராவோவை எல்பிடபிள்யூ செய்து வெளியேற்றினார். அடுத்த விக்கெட்டை வீழ்த்தினால் ஹாட்ரிக். பேட்டிங் முனையில் இருப்பது இந்தியாவின் முன்னாள் அதிரடி மன்னன் சேவாக். சேவாக்கையும் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாக்கி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.
அஃப்ரிடியின் ஹாட்ரிக்கால் மராத்தா அணி 46 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அதன் பிறகு, அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியாக ஆடினார். அவர் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்த போதிலும் 122 என்ற இலக்கை எட்டமுடியவில்லை. சேவாக்கின் மராத்தா அணி 10 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிறகு 96 ரன்களை மட்டுமே எடுத்தது.
சேவாக்கின் அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அஃப்ரிடியின் அணி வெற்றி பெற்றது.
