ஆஃப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் இந்தியாவில் டேராடூனில் நடந்துவருகிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஹஸ்ரதுல்லா சேசாய் மற்றும் உஸ்மான் கனி ஆகிய இருவரும் அபாரமாக ஆடி, முதல் விக்கெட்டுக்கு 236 ரன்களை சேர்த்தனர்.

கனி 73 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடக்கம் முதலே அயர்லாந்து பவுலிங்கை பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆடிய ஹஸ்ரதுல்லா, 62 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 16 சிக்ஸர்களுடன் 162 ரன்களை குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹஸ்ரதுல்லாவின் அதிரடியான ஆட்டத்தால் ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 278 ரன்களை குவித்தது.

279 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி 194 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து ஆஃப்கானிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

சாதனைகள்:

1. ஆஃப்கானிஸ்தான் அணி அடித்த 278 ரன்கள்தான் சர்வதேச டி20 போட்டியில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர். இதற்கு முன்னதாக 2016ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி அடித்த 263 ரன்கள் தான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

2. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹஸ்ரதுல்லா - கனி ஜோடி அடித்த 236 ரன்கள் தான் எந்தவொரு விக்கெட்டுக்கும் ஒரு ஜோடி அடித்த அதிகபட்ச ஸ்கோர்.

3. இந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்கள் அடித்த 22 சிக்ஸர்கள்தான் ஒரு டி20 போட்டியில் ஒரு அணி அடித்த அதிக சிக்ஸர்கள்.

4. அதேபோல இந்த போட்டியில் ஹஸ்ரதுல்லா அடித்த 16 சிக்ஸர்கள்தான் ஒரு டி20 போட்டியில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள்.

5. ஹஸ்ரதுல்லா அடித்த 162 ரன்கள்தான் சர்வதேச டி20யில் இரண்டாவது அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்.