ஆஃப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடரின் ஒரு போட்டியில் ஆஃப்கான் பேட்ஸ்மேன் ஹஸ்ரதுல்லா ஸேஸாய், ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசி மிரட்டியுள்ளார்.

ஐபிஎல்லை போல ஆஃப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடர் ஆஃப்கானிஸ்தானில் நடந்துவருகிறது. இத்தொடரில் பால்க் லெஜண்ட்ஸ் மற்றும் காபூல் ஸ்வனான் ஆகிய அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில், பால்க் அணி முதலில் பேட்டிங் ஆடியது. 

பால்க் அணியின் தொடக்க வீரரும் அதிரடி மன்னனுமான கிறிஸ் கெய்ல், தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி, எதிரணியின் பந்துவீச்சை பறக்கவிட்டார். 48 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 80 ரன்களை விளாசி ரன் அவுட்டானார் கெய்ல். மற்றொரு தொடக்க வீரரான முனவீரா 46 ரன்கள் அடித்தார். அந்த அணியின் ரசூலி 50 ரன்கள் எடுத்தார். இதையடுத்து அந்த அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்களை குவித்தது. 

245 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் ரஷீத் கான் தலைமையிலான காபூல் அணி களமிறங்கியது. ஆனால் அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் வேலையை எளிதாக்கும் வகையிலான அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார் தொடக்க வீரர் ஹஸ்ரதுல்லா. 

அப்துல்லா மஸாரி வீசிய ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசினார். 6 சிக்ஸர்கள் ஒரு அகலப்பந்து உட்பட அந்த ஓவரில் மட்டும் 37 ரன்கள் எடுக்கப்பட்டது. 7 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 17 பந்துகளில் 62 ரன்களை குவித்து ஹஸ்ரதுல்லா அவுட்டானார். எனினும் அந்த அணியால் 20 ஓவர் முடிவில் 223 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்ததால் பால்க் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டியில் தோற்றாலும் கிறிஸ் கெய்லின் அதிரடிக்கு ஹஸ்ரதுல்லா பதிலடி கொடுத்தது ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்ததோடு, அந்த அணியினருக்கும் சற்று ஆறுதலாக இருந்தது.