விராட் கோலி மற்றும் ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு இடையேயான உறவு குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆக்ரோஷமான வீரர். இளமைக் காலத்தில் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தார். எதிரணி வீரர்கள், ரசிகர்கள், ஊடகங்களின் விமர்சனங்களுக்கு அதிரடியாக பதிலடி கொடுப்பார். தற்போது அவற்றையெல்லாம் சற்று குறைத்துக்கொண்டார். 

எதிரணி வீரர்களை வம்புக்கு இழுத்து சீண்டுவதில், ஆஸ்திரேலிய வீரர்கள் தான் நம்பர் 1. அந்த அணியின் வீரர்கள் மட்டுமல்லாது ஊடகங்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்புமே அந்த அணியுடன் மோதும் எதிரணியின் முக்கியமான வீரரை சீண்டும். இந்தியாவுடனான போட்டி என்றால், விராட் கோலி தான் அவர்களின் இலக்கு.

இதற்கு முந்தைய ஆஸ்திரேலிய சுற்றுப்பயணங்களின்போது ஆஸ்திரேலிய ரசிகர்கள் கோலியை சீண்டுவதும் கோலி பதிலடி கொடுப்பதும், கோலியின் செயல்பாடுகளை அந்நாட்டு ஊடகங்கள் விமர்சிப்பதும் தொடர்ந்து நடந்துவந்துள்ளன. 

ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர் ஆகியவற்றை முடித்துக்கொண்டு இந்திய அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்று 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. 

இந்நிலையில், பெங்களூரு வந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்டிடம் மை நேஷன் ஆங்கில இணையதளம் எடுத்த பிரத்யேக பேட்டியில், ஆஸ்திரேலிய ரசிகர்கள் கோலியை சீண்டுவது குறித்தும் அந்த சீண்டல்கள் இந்த தொடரிலும் தொடருமா? ஆஸ்திரேலிய ரசிகர்கள் - கோலி இடையேயான உறவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த ஆடம் கில்கிறிஸ்ட், ஆஸ்திரேலிய ரசிகர்கள் எப்போதுமே எதிரணி வீரர்களை நம்பிக்கையை சிதைக்கும் விதமாக அவர்களை சீண்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் ரசிகர்களின் சீண்டல்களை விராட் கோலி முன்புபோல் எதிர்கொள்ளமாட்டார் என நினைக்கிறேன். கோலி முன்பைவிட தற்போது முதிர்ச்சியடைந்துள்ளார். அதுவும் தற்போது இந்திய அணியின் கேப்டனாக உள்ளார். எனவே கேப்டனாக அவரது பொறுப்பை உணர்ந்துள்ள அவர், இதுபோன்ற சீண்டல்களை கடந்த காலங்களை போல எதிர்கொள்ளமாட்டார். 

அதுமட்டுமல்லாமல் கோலி சவால்களை விரும்புபவர். எனவே அவரை வம்புக்கு இழுத்தால் அதற்கு எல்லாம் சேர்த்து பேட்டிங்கில் பதிலடி கொடுக்கக்கூடிய வீரர் அவர். அதனால் அவரை வம்பிழுத்தாலோ, சீண்டினாலோ, உலகின் தலைசிறந்த வீரரான கோலி, மேலும் சிறப்பாக ஆடி ரன்களை குவிப்பார். இங்கிலாந்தில் அதிக ரன்களை குவித்ததை போல ஆஸ்திரேலியாவில் அவரை குவிக்கவிடக்கூடாது என்றால் ரசிகர்கள் இதுபோன்ற சீண்டல், வம்பிழுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று கில்கிறிஸ்ட் எச்சரித்துள்ளார்.