ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் டி20 லீக் தொடரான பிக்பேஷ் லீக் தொடரின் இறுதி போட்டியில் ஃபின்ச் தலைமையிலான மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணியும் மேக்ஸ்வெல் தலைமையிலான மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியும் மோதின. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ரெனெகேட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 145 ரன்களை அடித்தது. 146 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஸ்டார்ஸ் அணியின் தொடக்க ஜோடியே 93 ரன்களை குவித்தது. ஆனால் அதன்பிறகு வந்த வீரர்கள் சொதப்பியதால் 20 ஓவர் முடிவில் ஸ்டார்ஸ் அணி 132 ரன்களை மட்டுமே எடுத்தது. 

இதையடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ரெனெகேட்ஸ் அணி பிக்பேஷ் லீக் தொடரை வென்று அசத்தியது. 

இந்த போட்டியில் ரெனெகேட்ஸ் அணியின் பேட்டிங்கின் போது அந்த அணியின் கேப்டன் ஃபின்ச் துரதிர்ஷ்டவசமாக அவுட்டாகினார். ஃபின்ச்சும் ஒயிட்டும் களத்தில் இருந்தபோது, ஒயிட் அடித்த பந்து பவுலரின் கையில் பட்டு ஸ்டம்பில் அடித்தது. அப்போது ரன் ஓடுவதற்காக கிரீஸை விட்டு சற்று முன்னே சென்றிருந்த ஃபின்ச், ரன் அவுட்டாகி வெளியேறினார். முதல் 2 விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, தானும் 13 ரன்களில், அதுவும் இப்படி அவுட்டானதால் கடுப்பானார் ஃபின்ச். 

களத்தில் இருந்து வெளியேறி பெவிலியனுக்கு திரும்புகையில், உள்ளே கிடந்த நாற்காலியை பேட்டால் ஓங்கி அடித்து தனது கோபத்தை வெளிப்படுத்தி சென்றார். அந்த வீடியோ வைரலாகிவருகிறது.