50 lakhs insurance for Indian players

கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் இந்தியாவின் 227 போட்டியாளர்களுக்கும் ரூ.50 இலட்சம் காப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, இந்த ஆண்டில் ஜகார்த்தாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டி, 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஆகியவற்றில் கலந்து கொள்ளும் இந்திய அணிக்கான விளம்பரதாரராக எடெல்வீஸ் நிதிச்சேவைகள் நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் நேற்று அறிவித்துள்ளது.

இந்த நிலையில் எடெல்வீஸ் நிறுவனம், கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் இந்தியாவின் 227 போட்டியாளர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

எடெல்வீஸ் நிறுவனம் 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கும் விளம்பரதாரர் ஆகியுள்ளது.

அதேபோல, இந்திய வீரர், வீராங்கனைகளின் உடைக்கான விளம்பரதாரராக ரேமண்ட் நிறுவனமும், விளையாட்டுச் சாதனங்களுக்கான விளம்பரதாரராக ஷிவ் நரேஷ் நிறுவனமும் பொறுப்பேற்றுள்ளன.

2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய போட்டியாளர்களுக்கு எடெல்வீஸ் நிறுவனம் ரூ.1 கோடி காப்பீடு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.