49 runs in three overs Jones nail biting match the success of Mumbai
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஏழாவது லீக் ஆட்டத்தில் மூன்று ஓவர்களில் 49 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்ற விறுவிறு ஆட்டத்தில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இண்டியன்ஸ் அணி முதல் வெற்றியைப் பெற்றது.
ஐபிஎல் தொடரின் மும்பையில் நேற்று ஏழாவது லீக் ஆட்டம் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணியில் கேப்டன் கெüதம் கம்பீர் -கிறிஸ் லின் இணை முதல் விக்கெட்டுக்கு 4.2 ஓவர்களில் 44 ஓட்டங்கள் எடுத்தது.
கம்பீர் 13 பந்துகளில் 19 ஓட்டங்கள் சேர்த்து வெளியேற, பின்னர் வந்த உத்தப்பா 4 ஓட்டங்களில் பரிதாபமாக அவுட்டானார்.
இதனையடுத்து மணீஷ் பாண்டே களமிறங்க, கொல்கத்தா 7.3 ஓவர்களில் 67 ஓட்டங்களை எட்டியபோது கிறிஸ் லின் அவுட்டானார். அவர் 24 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 32 ஓட்டங்கள் எடுத்தார்.
பின்னர் வந்த யூசுப் பதான் 6 ஓட்டங்களில் நடையைக் கட்ட, சூர்யகுமார் களம் இறங்கினார். இதன்பிறகு பாண்டே சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் பறக்கவிட்டார். சூர்யகுமார் 17 ஓட்டங்கள் சேர்த்து அவுட்டானார். இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 44 ஓட்டங்கள் சேர்த்தது.
கிறிஸ் வோக்ஸ் களமிறங்க, மணீஷ் பாண்டே 37 பந்துகளில் அரை சதம் கண்டார். அவர் தொடர்ந்து வேகம் காட்ட, கிறிஸ் வோக்ஸ் 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் சுநீல் நரேன் களமிறங்க, மெக்லீனாகான் வீசிய கடைசி ஓவரில் இரு சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் விளாசினார் பாண்டே. இந்த ஓவரின் கடைசிப் பந்தில் சுநீல் நரேன் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கொல்கத்தா 7 விக்கெட் இழப்புக்கு 178 ஓட்டங்கள் குவித்தது.
மும்பை தரப்பில் கிருனால் பாண்டியா மூன்று விக்கெட்டுகளையும், மலிங்கா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் பேட் செய்த மும்பை அணியில் பார்த்திவ் படேல் - ஜோஸ் பட்லர் இணை முதல் விக்கெட்டுக்கு 7.3 ஓவர்களில் 65 ஓட்டங்கள் சேர்த்தது.
படேல் 27 பந்துகளில் 30, ஜோஸ் பட்லர் 22 பந்துகளில் 28 ஓட்டங்கள் சேர்த்து அவுட்டானர். பிறகு வந்தவர்களில் கேப்டன் ரோஹித் சர்மா 2, கிருனால் பாண்டியா 11 ஓட்டங்களில் நடையைக் கட்ட, நிதிஷ் ராணாவுடன் இணைந்தார் கிரண் போலார்ட்.
கடைசி நான்கு ஓவர்களில் மும்பையின் வெற்றிக்கு 60 ஓட்டங்கள் தேவைப்பட்டன. ஆனால், 17-ஆவது ஓவரில் போலார்ட் 17 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ராணாவுடன் இணைந்தார் பாண்டியா. இவர்கள் இருவரும் அதே ஓவரில் தலா ஒரு பவுண்டரியை விரட்ட, கடைசி 3 ஓவர்களில் 49 ஓட்டங்கள் எடுக்க வேண்டியிருந்தது. இதனால் மும்பை வெற்றி பெறுவது கடினம் என எதிர்பார்க்கப்பட்டது.
டிரென்ட் போல்ட் வீசிய 18-ஆவது ஓவரில் ராணா ஒரு பவுண்டரியையும், ஒரு சிக்ஸரையும் விளாச, பாண்டியா தன் பங்குக்கு ஒரு சிக்ஸரை விரட்டினார். இதனால் அந்த ஓவரில் 19 ஓட்டங்கள் கிடைக்க, ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது.
அங்கித் ராஜ்புட் வீசிய 19-ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விளாசி அரை சதம் கண்ட கையோடு ராணா ஆட்டமிழந்தார். அவர் 29 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்களை எடுத்தார்.
இதையடுத்து ஹர்பஜன் சிங் களமிறங்க, அதே ஓவரின் கடைசிப் பந்தில் பாண்டியா ஒரு சிக்ஸரை விளாசினார். இதனால் கடைசி ஓவரில் 11 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.
போல்ட் வீசிய அந்த ஓவரில் பாண்டியா அதிரடியாக ஆட, சூர்யகுமாரின் மோசமான பீல்டிங்கால் மும்பைக்கு ஒரு பவுண்டரி கிடைத்தது. அதற்கடுத்ததாக பாண்டியா கொடுத்த கேட்ச்சை ரிஷி தவன் தவறவிட்டார்.
அடுத்த பந்தில் பாண்டியா பவுண்டரியை விளாச, மும்பை அணி 19.5 ஓவர்களில் 180 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.
பாண்டியா 11 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 29, ஹர்பஜன் சிங் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.
மும்பைத் தரப்பில் அங்கித் ராஜ்புட் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி தனது முதல் வெற்றியை பெற்றுள்ளது.
