45 Asian countries participating in the Asian Athletics Championship -22 from today
45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் – 22 ஒடிஸா மாநிலத் தலைநகர் புவனேசுவரத்தில் இன்று தொடங்குகின்றன.
22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மொத்தம் 45 நாடுகளைச் சேர்ந்த 800 தடகள வீரர் / வீராங்கனைகள் களம் காண்கின்றனர்.
1989- ஆம் ஆண்டு புணேவிலும், 2013- ஆம் ஆண்டு புது தில்லியிலும் நடைபெற்றதைத் தொடர்ந்து ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி இந்தியாவில் நடைபெறுவது இது மூன்றாவது முறையாகும்.
இந்த முறை போட்டியை நடத்தும் இந்தியா, அதிகபட்சமாக 46 வீராங்கனைகள் உள்பட மொத்தம் 95 பேரை களமிறக்குகிறது.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றிலேயே இந்தியா சிறப்பாகச் செயல்பட்டது 1985-ஆம் ஆண்டு இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்றபோது தான். அதில் இந்தியா 10 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்கள் வென்றிருந்தது.
இந்தப் போட்டியில் இம்முறை சீனா 50-க்கும் மேற்பட்ட வீரர் / வீராங்கனைகளை களமிறக்குகிறது.
கடந்த சீசனில் 2-வது இடம் பிடித்த கத்தார் இந்த முறை 10 பேருடன் பங்கேற்கிறது.
ஜப்பான் 50 பேருடனும், தென் கொரியா 23 பேருடனும் பங்கேற்றுள்ளது. பாகிஸ்தான் 6 போட்டியாளர்களுடன் கலந்து கொள்கிறது.
இந்தப் போட்டியில் வெற்றி பெறுவோர் ஆகஸ்ட் மாதம் இலண்டனில் நடைபெறவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெறுவர்.
போட்டிகள் தொடக்க நாளான இன்று தங்கத்தை தட்டிச் செல்லும் முயற்சியுடன் இந்தியாவின் மன்பிரீத் கெளர் (மகளிர் குண்டு எறிதல்), விகாஸ் கெளடா (ஆடவர் வட்டு எறிதல்), நயனா ஜேம்ஸ் (மகளிர் நீளம் தாண்டுதல்), அனு ராணி (மகளிர் ஈட்டி எறிதல்), நீரஜ் சோப்ரா (ஆடவர் ஈட்டி எறிதல்), தேஜிந்தர் பால் சிங் தூர் (ஆடவர் குண்டு எறிதல்) ஆகியோர் களம் காண்கின்றனர்.
