பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என தென்னாப்பிரிக்கா வென்றது.

இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 4 போட்டிகள் முடிந்த நிலையில், இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வென்றுள்ளன. கடைசி போட்டியில் வெல்லும் அணி தொடரை வெல்லும். 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் அடுத்ததாக நடக்க உள்ளது. 

இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்ட தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஃபெலுக்வாயோ ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

அந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஃபெலுக்வாயோ, பேட்டிங்கும் சிறப்பாக ஆடினார். அப்போது போட்டி கைமீறிப்போனதை அடுத்து, தோல்வியடைய போவதை அறிந்த பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது, ஃபெலுக்வாயோவின் சிறப்பான ஆட்டத்தை பொறுக்க முடியாமல், அவரது நிறத்தை குறிப்பிட்டு பேசினார். பாகிஸ்தான் கேப்டனின் கீழ்த்தரமான இந்த செயல், கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. 

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் சர்ஃபராஸின் செயலை கண்டித்தது. இதையடுத்து தனது செயலுக்கு மனம் வருந்தி நேரடியாக ஃபெலுக்வாயோவிடமே மன்னிப்பு கேட்டார் சர்ஃபராஸ் அகமது. எனினும் களத்தில் இதுபோன்ற நிற ரீதியாக தாழ்த்தி பேசுவது குற்றமாகும். அதனால் இந்த விவகாரத்தில் ஐசிசி, சர்ஃபராஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. 

ஃபெலுக்வாயோவை நிற ரீதியாக விமர்சித்ததற்காக 4 போட்டிகளில் ஆட சர்ஃபராஸிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில் அவர் ஆடவில்லை. ஐந்தாவது ஒருநாள் போட்டி மற்றும் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் இரண்டு டி20 போட்டிகள் ஆகியவற்றில் சர்ஃபராஸ் ஆடமாட்டார்.