3rd one day cricket India Vs south africa today
இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையே கேப்டவுனில் இன்று நடைபெறவுள்ள மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் அடிக்குமா ? என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
3 ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. டர்பன் மற்றும் செஞ்சூரியனில் நடந்த முதல் இரு ஆட்டங்களில் முறையே இந்தியா 6 விக்கெட் மற்றும் 9 விக்கெட் வித்தியாசங்களில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்திய வீரர்களை பார்த்து நடுங்கும் தென் ஆப்பிரிக்கா
டெஸ்ட் தொடரை பறிகொடுத்த பிறகு எழுச்சி பெற்றுள்ள இந்திய அணி முதல் இரு ஆட்டங்களிலும் தென்ஆப்பிரிக்காவை வறுத்தெடுத்துவிட்டது.. குறிப்பாக 2-வது ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வெறும் 118 ரன்னில் சுருட்டியது. கை மணிக்கட்டை அதிகமாக பயன்படுத்தி சுழற்பந்து வீசும் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரை பார்த்தாலே தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் நடுங்கிப்போய் விடுகிறார்கள்.
திடீரென வேகத்தை கூட்டியும், குறைத்தும் வீசும் இவர்களது சுழல் தாக்குலை கணித்து விளையாடுவதில் தடுமாறுகிறார்கள். இரு ஆட்டத்தையும் சேர்த்து யுஸ்வேந்திர சாஹல் 7 விக்கெட்டுகளும், குலதீப் 6 விக்கெட்டுகளும் சாய்த்துள்ளனர். இன்றைய ஆட்டத்திலும் இவர்கள் தான் இந்தியாவின் பிரதான அஸ்திரமாக இருப்பார்கள்.

ஹாட்ரிக் வெற்றி வெறுமா இந்தியா ?
ஹாட்ரிக் வெற்றியை நோக்கி களம் இறங்கும் இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் தங்களதுஆதிக்கத்தை நிலைநாட்டும் என ரசிகர்கள் காத்திருகின்றனர்.
தென்ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி இதற்கு முன்பு 4 ஒரு நாள் தொடர்களில் விளையாடி இருக்கிறது. எந்த தொடரிலும் இந்திய அணி 2 ஆட்டத்துக்கு மேல் வெற்றி பெற்றது இல்லை. அந்த மோசமான வரலாற்றை மாற்றுவதற்கு கோலி தலைமையிலான இந்திய வீரர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.

சொந்த மண்ணில் சொதப்பிய தென் ஆப்பிரிக்கா
சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்கா இந்த அளவுக்கு சொதப்பும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள். முந்தைய ஆட்டத்தில் 118 ரன்னில் ஆட்டம் இழந்தது உள்ளூரில் தென்ஆப்பிரிக்காவின் மோசமான ஸ்கோராகும். காயப்பிரச்சினை அந்த அணிக்கு தலைவலியாக உருவெடுத்துள்ளது. விரலில் காயத்தால் அவதிப்பட்ட அதிரடி மன்னன் டிவில்லியர்சுக்கு முதல் 3 ஆட்டங்களில் ஓய்வு அளிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாலும், விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் இடது கை மணிக்கட்டில் காயம் அடைந்ததாலும் எஞ்சிய தொடரில் இருந்து விலகி இருக்கிறார்கள். பிளிஸ்சிஸ் ஒதுங்கியதால் அனுபவம் இல்லாத 23 வயதான எய்டன் மார்க்ராம் கேப்டனாக்கப்பட்டார். டி காக்குக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பணியை புதுமுக வீரர் ஹென்ரிக் கிளாசென் கவனிக்க உள்ளார்.

நெருக்கடியில் இருந்து மீளுமா?
மொத்தத்தில் நெருக்கடியில் தத்தளிக்கும் தென்ஆப்பிரிக்க அணி சரிவில் இருந்து மீளவேண்டிய சிக்கலில் தவிக்கிறது. மணிக்கட்டை பயன்படுத்தி சுழற்பந்து வீசும் 5 பவுலர்களை வரவழைத்து தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் நேற்று வலைபயிற்சி மேற்கொண்டனர். இந்த வியூகம் அவர்களுக்கு பலன் அளிக்குமா? அல்லது மறுபடியும் ‘சரண்’ அடைவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தெறிக்கவிட தயாரான இந்தியா !!
கேப்டவுன் நியூசிலாண்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று இருந்தது. ஆனால் ஒரு நாள் போட்டிக்குரிய ஆடுகளம் சற்று வித்தியாசமாக இருக்கும். பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டுக்கும் ஒத்துழைக்கும் என்று தெரிகிறது.
ரசிகர்களும் இந்த கிரிக்கெட் போட்டியை பார்க்க தயாராகி விட்டனர்…. ஹாட்ரிக் வெற்றியை நோக்கி தெறிக்கவிட இந்திய வீரர்களும் தயார்.
