காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாகூர், அக்ஸர் படேல் ஆகிய மூவரும் ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக மற்ற மூன்று வீரர்கள் துபாய்க்கு அழைக்கப்பட்டுள்ளனர். 

14வது ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. லீக் சுற்று முடிந்து சூப்பர் 4 சுற்று இன்று தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், ஆசிய கோப்பை தொடரிலிருந்து மூன்று வீரர்கள் நீக்கப்பட்டு, இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக வேறு மூன்று வீரர்கள் துபாய்க்கு அழைக்கப்பட்டுள்ளனர். 

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 18வது ஓவரை வீசும்போது நிலைதடுமாறி கீழே விழுந்து ஹர்திக் பாண்டியாவிற்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் இந்த தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா, ஐபிஎல், இங்கிலாந்து தொடர் என ஓய்வின்றி அனைத்து வகையான போட்டிகளிலும் ஆடிவருகிறார். இந்நிலையில், காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஆசிய கோப்பை தொடரில் முதலிரண்டு போட்டிகளில் ஃபீல்டிங்கின் போது காயமடைந்த ஷர்துல் தாகூர் மற்றும் அக்ஸர் படேல் ஆகிய இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக ஜடேஜா, தீபக் சாஹர் மற்றும் சித்தார்த் கவுல் ஆகிய மூவரும் சேர்க்கப்பட்டு துபாய்க்கு சென்றுள்ளனர்.