மிர்புர்,
இங்கிலாந்து – வங்காளதேச அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் இம்ருல் கெய்ஸ் 1 ஓட்டத்தில் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார்.
2–வது விக்கெட்டுக்கு மொமினுல் ஹக், தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பாலுடன் இணைந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று அபாரமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டது. ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட்டுக்கு 171 ஓட்டங்கள் எடுத்து இருந்ததை பார்க்கையில் வங்காளதேச அணி வலுவான ஸ்கோரை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
8–வது சதம் கண்ட தமிம் இக்பால் 104 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மொயீன் அலி பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ.ஆனார்.
இதைத்தொடர்ந்து விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. யாரும் நினைத்து பார்க்காத வகையில் வங்காளதேச அணியின் கடைசி 9 விக்கெட்டுகள் 49 ஓட்டங்களுக்குச் சரிந்தது. இதனால் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 63.5 ஓவர்களில் 220 ஓட்டங்களில் ஆல்–அவுட் ஆனது.
இங்கிலாந்து அணி தரப்பில் மொயீன் அலி 5 விக்கெட்டும், கிறிஸ்வோக்ஸ் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 12.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 50 ஒட்டங்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டதால் அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது.
டக்கெட் 7 ஓட்டங்களிலும், கேப்டன் அலஸ்டயர் குக் 14 ஓட்டங்களிலும், கேரி பேலன்ஸ் 9 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
ஜோரூட் 15 ஓட்டங்களுடனும், மொயீன் அலி 2 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
இன்று (சனிக்கிழமை) 2–வது நாள் ஆட்டம் நடக்கிறது.
