2019 ஐபிஎல் சீசனுக்கான ஏலம் இதுவரை நடத்தப்பட்டதற்கு முன்கூட்டியே நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 11 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. இந்த 11 சீசன்களில் சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா மூன்று முறையும் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத்(டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ்) அணிகள் தலா இரண்டு முறையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒருமுறையும் கோப்பையை வென்றுள்ளன.

ஐபிஎல் நடத்தப்படும் காலம், கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். ஐபிஎல் ஏலம் நடத்தப்படுவதில் இருந்தே ஐபிஎல் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறிவிடும். வழக்கமாக ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் பெங்களூருவில் தான் நடக்கும். 

ஆனால் இந்த முறை டிசம்பர் 16ம் தேதியே நடக்கப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுவும் வழக்கமாக நடைபெறும் பெங்களூருவில் அல்ல; இந்த முறை ஏலம் கோவாவில் நடக்க உள்ளதாகவும் தெரிகிறது. இந்த முறை ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை மட்டும் மாற்றுவதால் ஒரே ஒருநாள் மட்டுமே ஏலம் நடக்க உள்ளது.