முதல் உலகக் கோப்பை போட்டியிலேயே தொடர்ச்சியாக 2 தங்கப் பதக்கங்கள் வென்று ஒட்டுமொத்த தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் 16 வயது இளம்பெண் மானு பேக்கர். 

அரியாணா மாநிலம், ஜஜ்ஜார் மாவட்டத்தின் கோரியா என்ற கிராமத்தில் பிறந்த மானு பேக்கரின் தந்தை ராம்கிஷண் பேக்கர் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். தாயார் சுமிதா, மகள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர்.

மானு சிறுவயதில் இருந்தே அனைத்து விளையாட்டுகள் மீதும் ஆர்வம் கொண்டிருந்தார். நடனத்திலும் சிறந்து விளங்கிய அவர், முதலில் குத்துச்சண்டையிலும், டென்னிஸ் போட்டியிலும் கவனம் செலுத்தினார். 

பின்னர், குத்துச்சண்டைப் போட்டியொன்றில் கண்ணில் காயம் ஏற்பட பெற்றோர் அறிவுறுத்தலின்பேரில் அந்த விளையாட்டை கைவிட்டார். அதன்பின்னர், ஸ்கேட்டிங் வீராங்கனையாக மாறிய மானு, மாநில அளவிலான போட்டியில் சாம்பியன் ஆனார். 

இடையே, மணிப்பூரில் பிரபல தற்காப்பு கலையான 'தாங் தா'வையும் கற்றுத் தேர்ந்தார்.  இவை அனைத்துக்கும் 2015-ஆம் ஆண்டோடு முடுக்கு போட்டார்.  அதன்பிறகு அவர் துப்பாக்கியை கையில் எடுத்தார். அந்தத் துப்பாக்கி சுடுதல் துறையில் சாதிப்பேன் என்று தந்தையிடம் உறுதி அளித்தார்.

தனது கிராமத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தில் சேர்ந்து துப்பாக்கி சுடுதல் பயிற்சி மேற்கொண்டார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 18 வயதுக்கு உள்பட்டோருக்கான இளையோர் பிரிவில் தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியிலும், 21 வயதுக்கு உள்பட்டோருக்கான ஜூனியர் பிரிவிலும் சாம்பியன் பட்டம் வென்றார்.

அதனைத் தொடர்ந்து ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவு துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பல பதக்கங்களை அள்ளினார் மானு பேக்கர். 

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் கடந்த டிசம்பரில் 61-வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. அதில், உலகக் கோப்பையில் பலமுறை பதக்கங்களை வென்ற சீனியர் வீராங்கனை ஹீனா சித்துவின் சாதனையை முறியடித்து ஆச்சரியமளித்தார்  மானு. 

2017-ல் நடைபெற்ற ஆசியான் ஜூனியர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார். தற்போது, மெக்ஸிகோவில் நடைபெறும் சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு சம்மேளனம் (ஐஎஸ்எஸ்எஃப்) சார்பிலான உலகக் கோப்பை போட்டியில், தனிநபருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் முதல்முறையாக தங்கம் வென்று சாதனை படைத்தார். 

அதே போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் சக நாட்டவரான ஓம் பிரகாஷ் மிதர்வாலுடன் இணைந்து இரண்டாவது முறையாக மீண்டும் தங்கம் வென்று சாதனை படைத்தார். இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஏர் பிஸ்டல் பிரிவில் ஒட்டுமொத்தமாக இந்தியா பெற்ற 4-வது தங்கம் இதுவாகும்.

மானு பேக்கர் தனது முதல் உலகக் கோப்பை போட்டியிலேயே தொடர்ச்சியாக 2 தங்கப் பதக்கங்கள் வென்று ஒட்டுமொத்த தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். மேலும், இந்தியாவிலேயே மிக இளம் வயதில் துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பையில் தங்கம் வென்றவர் மற்றும் சர்வதேச அளவில் இளம் வயதிலேயே உலகக் கோப்பையில் தங்கம் வென்ற 3-வது நபர் என்ற சாதனையையும் மானு படைத்துள்ளார்.

இந்த நிலையில், அதே போட்டியில் இன்று (மார்ச் 10) நடைபெறவுள்ள 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் பங்கேற்கும் மானு பேக்கர், தாம் பங்கேற்ற முதல் உலகக் கோப்பை போட்டியிலேயே மூன்று தங்கம் வென்றவராக முத்திரை பதிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த இந்தியர்களின் எதிர்பார்ப்பு.