1312 thugs banned to go to Russia - England Action for World Cup football tournament ...

உலகக்‍கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடைபெறுவதால் 1312 குண்டர்களுக்கு அங்கு செல்ல தடை விதித்துள்ளது இங்கிலாந்து.

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாக்‍களில் உலகக்‍கோப்பை கால்பந்து போட்டியும் ஒன்று. 

இந்தப் போட்டி தொடரின் 21-வது பதிப்பு ரஷ்யாவில் இன்று இரவு 8.30 மணிக்கு துவங்குகிறது. 87 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியால் தலைநகர் மாஸ்கோ விழாக்‍கோலம் பூண்டுள்ளது.

இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷ்யாவும், சௌதி அரேபியா அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் உலகக் கோப்பை போட்டிக்கு இடையூறை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக 1312 குண்டர்கள் ரஷியா செல்ல இங்கிலாந்து தடை விதித்துள்ளது.

இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் அளித்துள்ள தகவலின்படி, அவர்களில் 1254 பேர் தங்களது பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்களை அரசிடம் ஒப்படைத்துள்ள நிலையில் 58 பேர் தேடப்பட்டு வருகின்றனர். 

கால்பந்து விளையாட்டுக்கும், ரசிகர்களுக்கும் இடையூறு ஏற்படுவதை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது. 

மேலும், கால்பந்து ரசிகர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் இங்கிலாந்திலிருந்து ரஷியா செல்ல இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2016-ல் யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் இரு நாட்டு ரசிகர்களிடையே மோதல் எழுந்த சம்பவத்தின் அடிப்படையில் இந்தத் தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.