ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற RMC இன்விடேஷனல் கார்ட்டிங் கார் பந்தயத்தில், 10 வயது இளம் இந்திய ரேஸரான ஆதிகா மிர் மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற RMC இன்விடேஷனல் கார்ட்டிங் கார் பந்தைய இறுதிப் போட்டியில், இளம் இந்திய ரேஸரான ஆதிகா மிர் (10), மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

தகுதிச் சுற்றில், ஆதிகா மிர் முதல் இடத்தைப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி லேப்பில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக, ஒரு வினாடியில் பத்தில் ஒரு பங்கு நேர வித்தியாசத்தில் முதல் இடத்தைத் தவறவிட்டார். இதன் விளைவாக, ஹீட்ஸ் சுற்று (Heats) முடிவில் அவர் நான்காம் இடத்துக்குத் தள்ளப்பட்டார். அதைத் தொடர்ந்து நடந்த பிரி-ஃபைனல் சுற்றில், அவர் ஒரு விபத்தில் சிக்கியதால், இறுதிப் போட்டியை எட்டாவது இடத்தில் இருந்து தொடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இறுதிப் போட்டியில் புயல் வேக ஓட்டம்

போட்டியின் இறுதிச் சுற்றில், எட்டாவது இடத்தில் இருந்து ரேஸைத் தொடங்கிய ஆதிகா, அபாரமான வேகத்தைக் காட்டினார். அவர் இரண்டே லேப்களுக்குள் ஐந்து கார்களைப் பின்னுக்குத் தள்ளி, இறுதியில் மூன்றாவது இடத்தைப் பிடித்து போடியத்தில் ஏறி சாதனை படைத்தார்.

துபாயில் வசிக்கும் ஆதிகா மிர், ஃபார்முலா 1-ன் F1 அகாடமி DYD திட்டத்தின் ஆதரவு பெறும் முதல் இந்தியர் ஆவார். அண்மையில், ஸ்லோவாக்கியாவில் நடந்த 'சாம்பியன்ஸ் ஆஃப் தி ஃபியூச்சர் அகாடமி' (COFTA) சுற்றில் நான்காம் இடத்தையும், இந்த மாத தொடக்கத்தில் DAMC தொடரில் முதல் இடத்தையும் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதிகா மகிழ்ச்சி, தந்தை பெருமிதம்!

"பிரி-ஃபைனலில் ஏற்பட்ட விபத்து என்னை எட்டாவது இடத்துக்குப் பின் தள்ளிவிட்டது. இவ்வளவு பின்னால் இருந்து தொடங்குவதால், முதல் இரண்டு லேப்களில் ஆக்ரோஷமாகச் செல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியும். இரண்டாவது லேப்பிற்குள் ஐந்து இடங்கள் முன்னேறிவிட்டேன். ஆனால், அதற்குள் முன்னால் இருப்பவர் பெரிய இடைவெளியை ஏற்படுத்திவிட்டார். இதில் வெற்றி பெற விரும்பினேன், ஆனால் மூன்றாம் இடத்தில் திருப்திபட வேண்டியதுதான்" என்று ஆதிகா கூறினார்.

இந்தியாவின் முதல் தேசிய கார்ட்டிங் சாம்பியனான ஆதிகாவின் தந்தை ஆசிஃப் நசீர் மிர், சவாலான சூழலிலும் தனது மகளின் விடாமுயற்சி குறித்து பெருமிதம் தெரிவித்தார்.

"ஆதிகாவுக்கு இது சவாலானதாக இருந்தது, ஆனால் அவள் அதை ஆக்ரோஷத்துடனும் நேர்மறையாகவும் கையாண்டார். அவர் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுகிறார்" என்று ஆசிஃப் நசீர் மிர் தனது மகளின் வெற்றியைப் பாராட்டினார்.