சிறந்த விளையாட்டு மையங்களை அமைக்கக் கூடிய 10 பல்கலைக்கழகங்களை கண்டறிந்து விளையாட்டு அமைச்சகம் ஊக்குவிக்கும் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்துள்ளார்.
தில்லியில் நடைபெற்ற மாநில அமைச்சர்கள் மற்றும் செயலர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் இதுகுறித்து அவர் கூறியதாவது:
“தேசிய விளையாட்டு சம்மேளனங்களுடனான சமீபத்திய கூட்டத்தின்போது, மாநில விளையாட்டு அமைப்புகள் மீது நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. எனவே, மாநில அமைச்சகங்களும், செயலர்களும் இதுகுறித்து கலந்தாலோசித்து கருத்துத் தெரிவிக்கும் பட்சத்தில் இந்த விவகாரத்தில் ஒருமித்த வகையில் முடிவெடுக்க இயலும். ஏறத்தாழ 95 சதவீத விளையாட்டுச் சம்மேளனங்கள் மீது நடத்தை விதிகளை அமல்படுத்த வேண்டியுள்ளது. இதற்கான அனுமதியை உயர் நீதிமன்றமும் வழங்கியுள்ளது.
இதனிடையே, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராவதற்கான நடவடிக்கைகளை விளையாட்டு அமைச்சகம் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. பதக்க வாய்ப்புள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டம் தொடர்பாக வீரர்களிடம் இருந்து இதுவரை எந்தவொரு புகாரும் வரவில்லை. மாறாக, இந்த முறை ஏற்கெனவே ஏன் அமல்படுத்தப்படவில்லை என்ற கேள்விகளே எழுந்துள்ளன.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் 4 ஆண்டுகள் உள்ள போதிலும், அது அடுத்த ஆண்டு நடைபெறுவதுபோல கருத்தில் கொண்டு விளையாட்டு அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. எனவே, அணிகள் தேர்வு, இந்திய மற்றும் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் நியமனம் என அனைத்து விவகாரங்களிலும் அடுத்த 2 மாதங்களில் தயாராக திட்டமிட்டுள்ளோம்.
தகுதியான வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிக்கும் வகையில், வெளிப்படையாக விளம்பரம் செய்யப்படும். 5 சதவீத பணியிடங்கள் விளையாட்டு வீரர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் அனைத்து அமைச்சகங்களும் கைகோக்க வேண்டியுள்ளது. இது, பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை விளையாட்டுத் துறைக்கு அனுமதிக்க ஊக்குவிப்பதாக இருக்கும்.
பொதுவாக பள்ளிகள், கல்லூரிகளில் இருந்து மட்டுமே விளையாட்டு வீரர்கள் உருவாகி வந்த நிலையில், தற்போது பல்கலைக்கழங்களில் இருந்தும் அவர்கள் உருவாகின்றனர்.
எனவே, அத்தகைய வளரும் விளையாட்டு வீரர்களுக்காக சிறந்த விளையாட்டு மையங்களை அமைக்கக் கூடிய 10 பல்கலைக்கழகங்களை கண்டறிந்து, விளையாட்டு அமைச்சகம் அவற்றை ஊக்குவிக்கும் என்று விஜய் கோயல் கூறினார்.
