இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி சவுத்தாம்ப்டனில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆனது. எனவே 1-0 என இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கும் நிலையில், தொடரை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் இன்று தொடங்கியது. 

இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பேட்டிங்கை தேர்வு செய்தார். மழை இல்லாததால், ஆட்டம் சரியான நேரத்தில் தொடங்கி சிறப்பாக நடந்துவருகிறது.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ் மற்றும் டோமினிக் சிப்ளி ஆகிய இருவரும் களத்திற்கு வந்தனர். ரோரி பர்ன்ஸை 5வது ஓவரிலேயே வெறும்  6 ரன்களுக்கு ஷாஹீன் அஃப்ரிடி வீழ்த்தினார். இதையடுத்து டோமினிக் சிப்ளியுடன் ஜோடி சேர்ந்த 22 வயது இளம் வீரர் ஜாக் க்ராவ்லி களத்திற்கு வந்தது முதலே அடித்து ஆடி ஸ்கோர் செய்ய தொடங்கினார். 

ஒருமுனையில் ஜாக் கிராவ்லி சிறப்பாக ஆடி சீரான வேகத்தில் ஸ்கோர் செய்துகொண்டிருந்த நிலையில், மறுமுனையில் சிப்ளி 22 ரன்களிலும் கேப்டன் ரூட் 29 ரன்களிலும் ஓலி போப் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஜோ ரூட்டை நசீம் ஷா வீழ்த்த, சிப்ளி மற்றும் போப் ஆகிய இருவரையும் யாசிர் ஷா வீழ்த்தினார். 

விக்கெட்டுகள் விழுந்தாலும், ஜாக் க்ராவ்லி கொஞ்சம் கூட அசராமல் தரமான ஷாட்டுகளை சிறப்பாகவும் தெளிவாகவும் ஆடி ஸ்கோர் செய்துவருகிறார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்துகொண்டிருந்த நிலையில், ஐந்தாவது விக்கெட்டுக்கு க்ராவ்லியுடன் ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லர், அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடி, பார்ட்னர்ஷிப் அமைத்தார். பட்லர் களத்தில் நிலைத்து நிற்க, க்ராவ்லி சிறப்பாக ஆடி சர்வதேச டெஸ்ட் கெரியரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். சதத்திற்கு வெறும் 170 பந்துகளே எடுத்துக்கொண்டார் க்ராவ்லி. 

முதல் நாள் ஆட்டத்தின் மூன்றாவது செசன் நடந்துவரும் நிலையில், இங்கிலாந்து அணி 61 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் அடித்து ஆடிவருகிறது.