IPL 2023: ஆர்சிபியின் தலையெழுத்தை தீர்மானிப்பது அந்த ஒரு வீரர் தான்; ஃபாஃப், கோலிலாம் இல்ல! ஜாகீர் கான் அதிரடி
ஆர்சிபி அணியில் மிடில் ஆர்டர் அல்லது பின்வரிசையில் தினேஷ் கார்த்திக் சரியாக ஆடவில்லை என்றால் அந்த அணியால் ஜெயிக்கவே முடியாது என்று ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல்லில் 15 சீசன்கள் முடிந்து 16வது சீசன் நடந்துவருகிறது. இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாமல், ஒவ்வொரு சீசனிலும் களமிறங்குவதை போல முதல் முறையாக கோப்பையை எதிர்நோக்கி இந்த சீசனிலும் களமிறங்கியுள்ள அணி ஆர்சிபி. விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலகியதால், 2022ம் ஆண்டிலிருந்து ஃபாஃப் டுப்ளெசிஸ் கேப்டன்சி செய்துவருகிறார்.
கேப்டன் மாறினாலும் ஆர்சிபி அணியின் நிலை மட்டும் மாறவில்லை. கடந்த சீசனிலும் ஏமாந்த ஆர்சிபி அணி இந்த சீசனில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கி, முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது. அதற்கடுத்த 2வது போட்டியில் தோற்ற ஆர்சிபி அணி, 3வது போட்டியில் ஜெயித்தது. சிஎஸ்கேவிற்கு எதிரான 4வது போட்டியில் மீண்டும் தோற்றது.
அந்த அணி பேட்டிங்கில் இன்னும் விராட் கோலியையே அதிகமாக சார்ந்திருக்கிறது. ஃபாஃப் டுப்ளெசிஸ் சிறப்பாக ஆடுவதால் கோலி மீதான அழுத்தம் குறைந்திருக்கிறது என்றாலும், அவரும் சிறப்பாக ஆடினால் மட்டுமே அந்த அணியால் ஜெயிக்க முடியும் என்ற நிலைதான் உள்ளது. அதற்கு அவர் பெரிய இன்னிங்ஸ் ஆடினால் மட்டும் போதாது. கடைசிவரை நின்று ஆட்டத்தை முடித்து கொடுக்க வேண்டியது அவசியம்.
IPL 2023: மற்ற அணிகள் எல்லாம் வீரர்களை தேடுகின்றன.. தோனி மட்டும் தான் வீரர்களை உருவாக்குகிறார்..!
சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் 227 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய ஆர்சிபி அணி, விராட் கோலியின் (6) விக்கெட்டை ஆரம்பத்திலேயே இழந்துவிட்டது. ஃபாஃப் டுப்ளெசிஸ் (33 பந்தில் 62 ரன்கள்) மற்றும் மேக்ஸ்வெல் (36 பந்தில் 76 ரன்கள்) ஆகிய இருவரும் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார்கள். ஆனால் அவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பின் ஆர்சிபி அணியால் இலக்கை விரட்ட முடியாமல் தோல்வியை தழுவியது. ஆனால் அவர்களது அதிரடியால் 20 ஓவரில் 218 ரன்களை குவித்து வெறும் 8 ரன் வித்தியாசத்தில் தான் ஆர்சிபி அணி தோற்றது.
ஆர்சிபி அணி ஃபினிஷர் என்று வைத்திருக்கும் தினேஷ் கார்த்திக் அவரது ரோலுக்கு நியாயம் சேர்த்ததே இல்லை. கடந்த சீசனில் ஒன்றிரண்டு போட்டிகளை ஜெயித்து கொடுத்தார். அதனடிப்படையில், அவர் மீது நம்பிக்கை வைத்து ஆடவைக்கிறது ஆர்சிபி அணி. ஆனால் என்றோ ஒருமுறை நன்றாக ஆடுகிறாரே தவிர, சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை. சிஎஸ்கேவிற்கு எதிரான நேற்றைய போட்டியில் கூட, 14 பந்தில் 28 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடினாலும், அவரால் போட்டியை முடித்து கொடுக்க முடியவில்லை.
பின்வரிசையில் அவர் ஒருவர் தான் சீனியர் வீரர். அவர் சொதப்பினால் அந்த அணியால் வெற்றி பெறமுடியாது. மற்ற வீரர்கள் அனுபவமற்றவர்கள் என்பதால் தினேஷ் கார்த்திக் சொதப்பினால், ஆர்சிபி அணியின் இந்த பிரச்னை இந்த சீசன் முழுக்கவே தொடரும் என்று ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.