Asianet News TamilAsianet News Tamil

விரக்தியடைந்து விடாதப்பா தம்பி.. இந்திய டெஸ்ட் அணியில் புறக்கணிக்கப்பட்ட வீரருக்கு ஜாகீர் கான் அட்வைஸ்

நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்ட ஹனுமா விஹாரிக்கு ஜாகீர் கான் அறிவுரை கூறியுள்ளார்.
 

zaheer khan advice to india test batsman hanuma vihari
Author
Chennai, First Published Dec 3, 2021, 8:59 PM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது நியூசிலாந்து அணி. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்தை 3-0 என ஒயிட்வாஷ் செய்து இந்தியா வென்றது. அதைத்தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடந்துவருகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஹனுமா விஹாரிக்கு இடம் கிடைக்கவில்லை.

2018 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அறிமுகமாகி, அறிமுக தொடரிலேயே சவாலான இங்கிலாந்து கண்டிஷனில் சிறப்பாக பேட்டிங் ஆடி, பின்னர் 2 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணங்களிலும் நன்றாக பேட்டிங் ஆடி, கடந்த 3 ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியின் முக்கியமான வீரராக திகழ்ந்து வந்த ஹனுமா விஹாரிக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

2020-2021 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் சிட்னி டெஸ்ட்டில் இந்திய அணி மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தபோது, காயத்துடன் களமிறங்கி 162 பந்துகள் பேட்டிங் ஆடி அந்த போட்டியை இந்திய அணி டிரா செய்ய உதவினார். சிட்னி டெஸ்ட் டிரா ஆனதால்தான் இந்திய அணியால் அந்த டெஸ்ட் தொடரை ஜெயிக்க முடிந்தது. இந்திய அணி 2வது முறையாக ஆஸி., மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல முக்கிய காரணமாக விஹாரியும் திகழ்ந்தார்.

அந்த தொடருக்கு பின்னர் டெஸ்ட் போட்டிகளில் விஹாரி ஆடவில்லை. இங்கிலாந்து இந்தியாவிற்கு வந்து ஆடிய டெஸ்ட் தொடர், இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் ஆகிய தொடர்களில் விஹாரி ஆடவில்லை. கடைசியாக ஆடிய போட்டி வரை அருமையாக ஆடிய ஹனுமா விஹாரி, அப்படியே ஓரங்கட்டப்படுகிறாரோ என்ற சந்தேகம் எழ, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஹனுமா விஹாரி புறக்கணிப்பை கடுமையாக விமர்சித்து தள்ளினர்.

இதையடுத்து, அடுத்த சில மணிநேரங்களில் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான இந்தியா ஏ அணியில் ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டார். ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்த இந்தியா ஏ அணியில் விஹாரி பெயர் இடம்பெறவில்லை. இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்ட பிறகு எழுந்த விமர்சனங்களை அடுத்து, அவரது பெயர் இந்தியா ஏ அணியில் இடம்பெற்றது. தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக ஹனுமா விஹாரி இந்தியா ஏ அணியில் ஆடிவருகிறார்.

இந்திய டெஸ்ட் அணியில்  புறக்கணிக்கப்பட்ட ஹனுமா விஹாரி புறக்கணிக்கப்பட்டது குறித்து பேசியுள்ள ஜாகீர் கான், இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டதால் ஹனுமா விஹாரி விரக்தியடையக்கூடாது. பேட்டிங்கில் கவனம் செலுத்தி அவரது பேட்டிங்கை மேம்படுத்த வேண்டும். பெரிதாக குழப்பிக்கொள்ளாமல் அனைத்தையும் எளிமையாக வைத்திருக்க வேண்டும் என்று ஜாகீர் கான் கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios