உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. பாகிஸ்தான் அணி லீக் சுற்றின் முடிவில் 11 புள்ளிகளை பெற்றும் நெட் ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு சென்றதால் பாகிஸ்தான் அணி வெளியேறியது. 

உலக கோப்பை தொடரின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவின் கேப்டன்சி மற்றும் ஃபிட்னெஸ் ஆகியவை கடும் விமர்சனத்துக்கும் கிண்டலுக்கும் ஆளானது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு எதிரான அடுத்தடுத்த தோல்விகளுக்கு பிறகு மீண்டெழுந்து தொடர் வெற்றிகளை பெற்றபோதிலும் பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை. 

பாகிஸ்தான் அணி தவறுகளையும் சிக்கல்களையும் கலைந்து மீண்டெழ வேண்டிய அவசியம் உள்ளது. உள்நாட்டு கிரிக்கெட்டை வலுப்படுத்தி நிறைய திறமையான வீரர்களை அடையாளம் கண்டு அணியில் சேர்த்து அணியை வலுவான அணியாக கட்டமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. 

பாகிஸ்தான் அணி உலக கோப்பையில் சிறப்பாக பந்துவீசியது. ஆனால் பேட்ஸ்மேன்கள் தான் சொதப்பினர். ஷோயப் மாலிக்கை நீக்கிவிட்டு ஹாரிஸ் சொஹைல் அணியில் சேர்க்கப்பட்டபிறகு, அவர் சிறப்பாக ஆடியதால் கடைசி 4 லீக் போட்டிகளில் அந்த அணி வென்றது. பாகிஸ்தான் அணி சில அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வலுவான மற்றும் தரமான அணியை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

இந்நிலையில், கேப்டன் சர்ஃபராஸை மாற்ற வேண்டும் என்று அக்தர் தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் அணியை மறுசீரமைப்பு செய்து வலுவாக்க வேண்டிய கட்டாயம் இருப்பதை உணர்ந்த முன்னாள் கேப்டனும் தற்போதைய பிரதமருமான இம்ரான் கான், அவரே களத்தில் இறங்கி அணியை கட்டமைக்க இருப்பதை அண்மையில் உறுதிப்படுத்தினார். 

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ஜாகீர் அப்பாஸ், பாகிஸ்தான் அணியை சிறந்த அணியாக உருவாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய ஜாகீர் அப்பாஸ், பாகிஸ்தான் அணிக்கு நிரந்தரமான ஒரு துணை கேப்டனை நியமித்து, அடுத்த கேப்டன் பதவிக்கு அவரை உருவாக்குவது அவசியம். டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். டெஸ்ட் போட்டிகளின் வாயிலாக தலைசிறந்த வீரர்களை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. உள்நாட்டு கிரிக்கெட்டில் சீர்திருத்த நடவடிக்கைகளை அதிரடியாக மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உள்ளது என்று ஜாகீர் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.