இந்திய அணியின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தார். 

கங்குலி தலைமையிலான இந்திய அணியில் 2000ம் ஆண்டில் அறிமுகமான யுவராஜ் சிங், 2003, 2007, 2011 ஆகிய 3 ஒருநாள் உலக கோப்பை தொடர்களில் ஆடியுள்ளார். 2011 உலக கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். அந்த உலக கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருதையும் யுவராஜ் தான் வென்றார். 2011 உலக கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே யுவராஜின் பங்களிப்பு அளப்பரியது. 

அதேபோல ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசி அரிய சாதனையை நிகழ்த்திய யுவராஜ் சிங், 2007ல் டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றபோதும் முக்கிய பங்காற்றினார். இந்திய அணிக்காக மிகப்பெரிய பங்காற்றியுள்ள யுவராஜ் சிங், கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக இந்திய அணியில் ஆடவில்லை. 2017ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் யுவராஜ் ஆடியதுதான் கடைசி.  அதன்பிறகு நடந்த யோ யோ டெஸ்டில் தோல்வி அடைந்ததால், ஓரங்கட்டப்பட்ட யுவராஜ், அதன்பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை. 

இந்நிலையில், இன்று தனது ஓய்வை அறிவித்தார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மிகச்சிறந்த வீரராக ஒரு ரவுண்டு அடித்த யுவராஜ் சிங், டெஸ்ட் போட்டிகளில் பெரிதாக சோபிக்கவில்லை. அதனால் டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் அவருக்கு கிடைத்ததே இல்லை. அவ்வப்போது சேர்க்கப்படுவதும் பின்னர் தூக்கி எறியப்படுவதுமாகவே இருந்தார். 

304 ஒருநாள் போட்டிகளில் ஆடி 8701 ரன்களை குவித்த யுவராஜ் சிங், தனது 18 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் வெறும் 40 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் வெறும் 3 சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த வீரராக திகழ்ந்தும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிதாக சோபிக்கவில்லை. இன்று செய்தியாளர்களை அழைத்து தனது ஓய்வை அறிவித்த யுவராஜ், தனது கிரிக்கெட் வாழ்வில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சோபிக்காதது ஒன்றுதான் பெரிய குறை என்று வருத்தம் தெரிவித்தார்.