அண்மையில் சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் ஆகியவற்றில் இருந்து ஓய்வு அறிவித்த யுவராஜ் சிங், பிசிசிஐயிடம் அனுமதி பெற்று கனடா டி20 லீக் தொடரில் ஆடிவருகிறார். 

கனடா டி20 லீக் தொடரில் ஆடும் டொரண்டோ நேஷனல்ஸ் அணியின் கேப்டனாக யுவராஜ் சிங் உள்ளார். ஐபிஎல்லில் கடந்த சில ஆண்டுகளாக சரியாக ஆடாமல் சொதப்பிய யுவராஜ் சிங், கனடா டி20 லீக்கில் அபாரமாக பேட்டிங் ஆடிவருகிறார். ஐபிஎல்லில் கடந்த சில சீசன்களாகவே அதிரடியாக ஆடமுடியாமல் திணறினார் யுவராஜ். ஆனால் கனடா டி20 லீக்கில் நல்ல ஃப்ளோவில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்துவருகிறார். 

இந்நிலையில், கனடா டி20 லீக் தொடரில் ஒரு சூப்பரான கேட்ச்சை பிடித்த யுவராஜ் சிங், பேட்டிங்கிலும் அசத்தியுள்ளார். ப்ராம்ப்டன் வால்வ்ஸ் மற்றும் டொரண்டோ நேஷனல்ஸ் அணிக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ப்ராம்ப்டன் வால்வ்ஸ் அணியின் முன்சி மற்றும் பாபர் ஹயாட் ஆகிய இருவரின் அதிரடியான பேட்டிங்கால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 222 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் யுவராஜ் சிங் 2 கேட்ச் பிடித்தார். அதில் சிம்மன்ஸுக்கு பிடித்தது சூப்பர் கேட்ச். அந்த வீடியோ இதோ..

223 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய டொரண்டோ நேஷனல்ஸ் அணியின் மெக்கல்லமும் தாமஸும் ஓரளவிற்கு ஆடினர். மெக்கல்லம் 36 ரன்களும் தாமஸ் 22 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் பொறுப்பை தனது தோள்களில் சுமந்த யுவராஜ் சிங், 22 பந்துகளில் 3 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 51 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வந்த டொரண்டோ அணி வீரர்களும் போராடினர். ஆனால் அந்த அணியால் 20 ஓவர் முடிவில் 211 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்ததால் 11 ரன்கள் வித்தியாசத்தில் டொரண்டோ நேஷனல்ஸ் அணி தோல்வியடைந்தது. அந்த அணி தோற்றாலும் யுவராஜ் சிங்கின் ஆட்டம் அபாரமானது.