இந்திய கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய பங்காற்றிய யுவராஜ் சிங், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார். இந்திய அணியின் மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங், இந்திய அணியில் 17 ஆண்டுகள் ஆடினார். 2000ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டுவரை இந்திய அணியில் ஆடினார். 

கங்குலி தலைமையிலான இந்திய அணியில் 2000ம் ஆண்டில் அறிமுகமான யுவராஜ் சிங், 2003, 2007, 2011 ஆகிய 3 ஒருநாள் உலக கோப்பை தொடர்களில் ஆடியுள்ளார். 2011 உலக கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். அந்த உலக கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருதையும் யுவராஜ் தான் வென்றார். 2011 உலக கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே யுவராஜின் பங்களிப்பு அளப்பரியது. 

2007 டி20 உலக கோப்பை தொடரின் தொடர் நாயகனும் யுவராஜ் சிங் தான். அந்த தொடரில் தான் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர் விளாசினார் யுவராஜ். இந்திய அணிக்காக மிகப்பெரிய பங்காற்றியுள்ள யுவராஜ் சிங், கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக இந்திய அணியில் ஆடவில்லை. 2017ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் யுவராஜ் ஆடியதுதான் கடைசி.  அதன்பிறகு நடந்த யோ யோ டெஸ்டில் தோல்வி அடைந்ததால், ஓரங்கட்டப்பட்ட யுவராஜ், அதன்பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை. 

இந்நிலையில், கடந்த 10ம் தேதி தனது ஓய்வை அறிவித்தார் யுவராஜ் சிங். இந்திய கிரிக்கெட்டுக்கு மிகச்சிறந்த பங்காற்றியுள்ள யுவராஜ் சிங்கை கௌரவப்படுத்தும் விதமாக அவருக்கு ஃபேர்வெல் போட்டி ஏற்பாடு செய்து அவரை கெத்தாக வழியனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அதற்கு முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் பலரும் யுவராஜ் சிங் ஃபேர்வெல் போட்டிக்கு தகுதியானவர்தான் என்று ஆதரவு தெரிவித்துவருகின்றனர். 

இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் கேப்டன் கங்குலி, ஃபேர்வெல் போட்டி என்பதில் எனக்கு உடன்பாடே இல்லை. அணியில் ஆடிக்கொண்டிருக்கும்போதே ஓய்வு பெற்றால் ஓகே. இல்லையெனில் ஃபேர்வெல் போட்டி ஒன்றில் ஆடுவது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு கிரிக்கெட் வீரராக யுவராஜ் சிங் செய்த சாதனைகள் எந்த காரணத்தை முன்னிட்டும் அழிந்துவிடப்போவதில்லை. எனவே எனக்கு அதில் நம்பிக்கையில்லை. யுவராஜ் சிங் டெரிஃபிக் வீரர், மேட்ச் வின்னர். அவரது சாதனைகளை நினைத்து அவர் கண்டிப்பாக பெருமைப்படுவார் என்று கங்குலி தெரிவித்தார்.